Saturday, January 31, 2015

விடை தேடும் உவமேயம்

ஒவ்வொரு பத்து வருடத்தையும்
வாழ்க்கை கடக்கும் தருணங்களை 
மலை பயணத்தின் 
கொண்டை ஊசி வளைவுகளின் 
திருப்பங்களாக 
உணரும் வேளையில் . . .
இருளில் இருந்து
தீடீரென்று வெளிப்படும் 
வழிபறிகாரனைப  போல்
எழும் ஒரு  கேள்வி :
வாழ்க்கை  என்பது
மலை மீது ஏறுவதா 
 மலையில் இருந்து இறங்குவதா

Wednesday, January 28, 2015

பாடல்

கண்ணதாசன் மிக சிறந்த கவிஞர் . அதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை. அதே வேளையில் ஏனைய பிற கவிஞர்கள்
கண்ணதாசன்  அளவிற்கு  பாராட்ட படுவதில்லை.
ஆனால் இதில் வியப்பு என்னவென்றால்,



மருதகாசி அவர்கள் எழுதிய ,
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் 
ஏன் கையை  ஏந்த வெளிநாட்டில் 
 ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உ ன் மதிப்பு அயல் நாட்டில்

என்ற வரிகளோ,


புலவர் புலமைபித்தன் எழுதிய
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் 
பிறக்கையிலே 
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் 
அன்னை வளர்பதிலே


என்ற வரிகளோ,



மக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் எழுதிய,
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே
இருக்குது 
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் 
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது
என்ற வரிகளோ,



புகழடைந்த அளவிற்கு , எல்லா அரசியல் மற்றும் கலை 
இலக்கிய மேடைகளிலும் முழங்க பட்ட அளவிற்கு 
கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந் து
கூற முடியுமா என்பது கேள்வி குறியே  

Tuesday, January 27, 2015

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2

ஒரு வருத்தம்


அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை
படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும்
ஓர் உரையாடல்
பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர்
சொல்கிறார்
அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட 
நம்பிடலாம்.
ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை
நம்பவே கூடாது. 
என்னைமிகவும் காயபடுத்திய வசனம்.
 அம்மா என்ற உறவுநிலையில் 
ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற 
மனிதன் எனக்குள்ளும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
என்னை விட்டுத்தள்ளுங்கள்.
தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே 
தரிசித்த அபிராம பட்டரையோ,
எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான்
என்றால் மனைவியும் தெய்வம்தானே 
என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ 
அந்த வசனத்தை கொண்டு எங்கனம் 
அளப்பது?
அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம்
என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்டு ,

ஒரு பாராட்டு


சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி
என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
அந்த செய்தி ....
ஒரு இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு 
இருக்கும் போது அவரை தொடர்ந்து வந்த வாகனம்
மிகவும் வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல்
மோதியும் விடுகிறது.
அந்த வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை
உணராமல் 
அந்த இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு
ஆணாதிக்க மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு 
செல்கிறார்.
அந்த இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன்
விளைவாக கடும் கோபம் வருகிறது.
அந்த வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார்.
பின்னால் துரத்தி வரும் பெண்ணை பார்த்து 
அந்த மனிதர் பயந்து விடுகிறார்.
அந்த மனிதர் சென்ற வண்டி இப்பொழுது
ஒரு காவல் நிலையத்தின் வாசலில் போய்
நிற்கிறது.
வேகமாக வண்டியில் இருந்து குதித்தவர் 
காவல் நிலையத்திற்குள் சென்று விடுகிறார்.
இப்பொழுதும் அசராத  அந்த பெண் தானும் காவல்
நிலையத்திற்குள் சென்று அந்த மனிதரை தேடுகிறார்
அங்கு சென்ற பின்பே அவர் காவல் துறையில்
ஒரு உயர் பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது.
அவரின் உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண்,
பெண்கள் குறித்து நீங்கள் சொன்ன இழிவான
சொற்களுக்கு மன்னிப்பு  கேட்டே ஆக வேண்டும்
என்று போராடுகிறார்.
இதுவரையில் 
ஆணாதிக்க சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த 
மனிதனால் ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு 
கேட்பது என்ற வறட்டு கெளரவம் தடுத்தது.
கடைசியில் தன் போராட்டத்தில் வென்ற பின்பே 
அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான்
அறிந்தவை.
அந்த பெண் வேறு யாருமில்லை.
திரு.அகத்தியன் அவர்களின் மகள்தான்.
தன்னுடைய மகளை இவ்வளவு துணிச்சலாக
வளர்த்த திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு ,

ஒரு நன்றி



என் பள்ளிநாட்களில் நண்பர்களை பிரியநேரும்போது மிகவும் 
மனம் நொறுங்கி போவேன்.
மணப்பாறையில் இருந்து எங்கள் குடும்பம் திருச்சிக்கு 
இடம் பெயர்ந்த போது ஆரம்ப பள்ளி நண்பர்களை பிரியநேர்ந்தது.
ஏதோ உலகமே இருண்டு விட்டதை போன்ற உணர்வு.
உலகமே அழிந்து விட கடைசியில் மாட்டிகொண்ட ஒற்றை 
மனிதனின் மனதவிப்பு.
இன்னும் எப்படி எப்படியோ வர்ணிக்கலாம்
என் மன வேதனைகளை படம் பிடிக்க
அந்த வார்த்தைகளுக்கெல்லாம் போதுமான சக்தி இல்லை 
ஆனால் இவையெல்லாம் திரு.அகத்தியன் அவர்களின் 
விடுகதை படம் பார்க்கும் வரையில் தான்.
அந்த படத்தின் நாயகி தன் தந்தையை இழந்துவிட
அறிவுரை கூறும் ஜனகராஜ் எல்லா உறவுகளுக்கும்
ஒரு ஓய்வு காலம் உண்டு
அதற்கு பின்பு அந்த இடத்தை இன்னொருவர் 
நிரப்புவர் என்ற வசனமே இன்றளவும் பிரிவு
பெருந்துயரை தாங்கும் மாமருந்தாக
எனக்கு உள்ளது.
அந்த வசனத்தை எனக்கு ஒரு வரமாக வழங்கிய
திரு. அகத்தியன் அவர்களுக்கு என் நன்றி.



 

Monday, January 19, 2015

படைப்பாளியின் மதம்

என் பள்ளி நாட்களில் ஒரு நாள் வானொலியில் கவிஞர் மு.மேத்தா எழுதிய

"காலம் பொறந்திடுச்சு சின்ன மயிலே" என 
தொடங்கும் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
அந்த பாடலில், 
அஞ்சுகின்ற முகத்தை  காண்பதற்கு ஆறுமுகம் கூட 

வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு?
என்ற வரிகளை கேட்ட என் தந்தை ,
அவரு (கவிஞர் மு.மேத்தா) பாய் அதான் இப்படி எழுதி இருக்காரு என்று 
சிரித்துகொண்டே கூறினார்.
கவிஞரின் பாடல் வரிகளுக்கு மத சாயம் பூசிய வார்த்தைகளை கேட்டவுடனேயே
நான் கவிஞர் .சிற்பியின் கவிதை ஒன்றை குறிபிட்டு என் தந்தைக்கு சட்டென்று
 பதில் தந்தேன்
கவிஞர் சிற்பி தன் கவிதை ஒன்றில் இராணுவத்தினரால் பாலியல்
வல்லுறவிற்கு ஆளான பெண்ணின் வேதனையின் உச்சத்தை பதிவு செய்வதற்கு,
"அருளாளனும் அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான்" என்று எழுதினார்

 இங்கே கவிஞர் சிற்பி பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை
அல்லாவால் தாங்கமுடியவில்லை என்ற பொருள் படவே  அவ்வாறு
தன் கவிதையில் எழுதியுள்ளார்.
அதைப்போலவே கவிஞர் மு.மேத்தாவும் அச்சம் கொள்ள கூடாது.
துணிந்து போராடினாலே தெய்வம் துணை நிற்கும்.
என்ற கருத்தை பதிவு செய்வதற்கே அவ்வாறு எழுதியுள்ளார்.
இதில் மேத்தாவை இஸ்மாயிலர் என்றோ சிற்பியை ஹிந்து  என்றோ
அடையாள படுத்துவது அபத்தத்திலும் அபத்தம்.
மதமேதும் இல்லாமல் இருப்பதே படைப்பாளியின் மதம்.