Wednesday, May 30, 2018

ஆன்மீக அரசியல் வித்தகர்






எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடுமாம் ஆன்மீக அரசியல் வித்தகரின் அறிவிப்பு இது.

எல்லாவற்றிக்கும் போராடும் நிலையில் மக்களை தள்ளியது யார்?

மக்கள் போராடக்கூடாது என்கிறீர்களே!

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும்  உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறி ஏறி இந்த நாசகார ஆலையை தமிழ்நாடு மீது திணிக்க படும் பாடு படுகிறார்கள்?

அணில் அகர்வாலிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

மகாராஷ்டிரா, கோவா, குஜராத் இந்த மாநிலத்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிராக போராடவில்லையா?

அவர்களிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

எல்லாவற்றிக்கும் போராட்டம் தீர்வாகாது. நீதி மன்றங்களை நாடுங்கள் என்று கூறுகிறீர்களே!

நீதி மன்ற உத்தரவுகளை எந்த அரசு மதித்து செயல் படுகிறது?

தேசீய நெடுஞசாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி எத்தனை முறை உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்பும்,சட்டத்தின் சந்து பொந்துகளை (நெடுஞசாலைகளில் இருந்து 100அடி தள்ளி சாராய கடைகளை அமைத்து) பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துகிறது மாநில அரசு.

காவேரியில் நம் பங்கை தர சொல்லி உச்ச நீதி மன்றம்  எத்தனை முறை உத்தரவிட்டது ?

கர்நாடக மாநில அரசு அந்த உத்தரவை மதித்ததா ?

 மைய அரசு கர்நாடக அரசை வற்புறுத்தியதா ?

இந்நிலையில் தமிழ் மக்கள் போராடுவது சரியா ? இல்லையா ?
ஆன்மீக அரசியல் வித்தகர்தான் பதில் கூறவேண்டும்.
சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கினால் நான் பொறுக்க மாட்டேன் .

உங்கள் வாதப்படி தாக்கியவர்களை திருப்பி தாக்க வேண்டியதுதானே ?

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், காலுக்கு கீழே சுடுதல், ஆகாயத்தை நோக்கி சுடுதல் இத்தனை வாய்ப்புகள் இருந்தும்,

குறி பார்த்து சுட்ட கொடூரம் ஏன்?


சமூக விரோதிகள் நச்சு கிருமிகள் அதிகரித்து விட்டார்கள்.

அரசு அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அங்கே சுடப்பட்டவர்களில் ,படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரேனும் நீங்கள் பட்டியலிட்ட (காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தல், ஆலை பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு  தீ வைத்தல்) குற்றங்களை செய்ததற்கு  ஆதாரம் உண்டா ?

நீங்கள் சொன்ன சமூக விரோதிகள் யார் ? இப்படி பொது சொத்துக்களுக்கு தீ வைப்பதால் அவர்கள் சாதித்ததென்ன ? அவர்களை இன்னுமா கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை ?

ஸ்டெர்லைட் ஆலை சுற்று சூழல் விதிகளை மீறி உள்ளது .100 கோடி அபராதம் கட்டவேண்டும் என்று கடைசியாக தந்த தீர்ப்பில் தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 ஆனால் ஆலை அதிபர் அணில் அகர்வாலோ,

 ஆலையால் சுற்று சூழல் மாசுபாடு என்பது போராளிகள் என்ற பெயர் கொண்ட தேச விரோதிகளின் பொய் பிரசாரம் என்று முதலை கண்ணீர் வடிக்கிறார்.
ஆன்மீக அரசியல் வித்தகரை விடவும் அவர் பெரிய வித்தகராக இருப்பார் போலிருக்கிறது.
கொஞ்சம் நாமெல்லாம் அயர்ந்தால்,

முழு பூசிணிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைப்பவர்களுக்கு மத்தியில்,

இமய மலையையே ஒரு கவளம் சோற்றில் மறைத்துவிடுவார் போலிருக்கிறது.


போராடும் நம் தமிழ் மக்களை பார்த்து,

ஆன்மீக அரசியல் வித்தகர் சமூக விரோதிகள் என்கிறார்.

ஆலை வித்தகர் தேச விரோதிகள் என்கிறார்.

இந்த அட்டுழியங்களை பார்க்கும் போது,

எனக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

 
நாக்கை சுழற்றினால்


நாச சக்தியாம்.

பேசவே கூடாதாம்

பிரிவினை வாதியாம்.

உலையில் தான்

அரிசி பொங்க வேண்டுமாம்

உள்ளத்தினால் யாரும்

பொங்கவேகூடாதாம்

தமிழா! தமிழா!

அகராதி ஓன்று புதிதாய் வாங்கு!

அர்த்தங்கள் புரிந்தபின்

சுகமாய் தூங்கு!

No comments:

Post a Comment