Wednesday, May 16, 2018

மஸ்வாதி கல்லறை



சொர்க்கத்தின் திறவுகோல்கள்

உங்களின் சட்டைப் பைகளில்

மட்டுமே உள்ளதாக பகல்கனவா ?

“மற்றவர்களை தீர்ப்பிடாதிருங்கள்”

என்ற விவிலிய வரிகளை நீங்கள் வாசித்ததில்லையா?

அல்லது உங்கள் கண்களுக்கு

அந்த புனிதமிக்க வரிகள் தென்படவே இல்லையா?

பிணத்தை காறி உமிழ்வதை போன்று

இதென்ன கொடூர செயல்?

“பாவம் செய்யாதவன் எவனோ

அவனே அவள் மீது கல் எரிய கடவன்”

என்ற தேவமைந்தனின்

வார்த்தையை அல்லவா

நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்?  


 
பிறக்கும் போது தாலாட்டு
இறந்த பின்போ ஒப்பாரி
இடையினில் வரும்
பின்னணி இசையே இந்த வாழ்க்கை
இசைக்கும் கலைஞன்
எல்லாம் வல்ல இறைவன்

நடுவினில் புகும் சுருதி பேதங்களே!
உங்கள் நலன்களை மட்டும்
பேணும் சுய நல கீதங்களே!
பாவமன்னிப்பு கேட்டு
உங்களை மட்டும் பத்திரப்படுத்திக்கொண்டு
அவர்களை மட்டும்
அவமான புதைகுழியில்
அடக்கம் செய்வீரோ ?
வாழ்க்கையின் கொல்லைப்புற
தோட்டத்தில் கண் உறங்கும்
அவர்கள்மீது இனியேனும்
பன்னீர் பூக்கள் சொரியாவிடினும்

சருகுகளை தூவி
சங்கடப்படுத்தவேண்டாம்.






No comments:

Post a Comment