Monday, June 4, 2018

நியாமான விமர்சனங்களும் காழ்ப்புணர்ச்சிகளும்



கவிஞர்களின் ஒரு சில கவிதைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுவதுண்டு.
அவற்றில் சில நியாயமானவையாக இருப்பதுண்டு. சிலவற்றில் காழ்புணர்ச்சியே வெளிப்படும். அப்படிப்பட்ட இரண்டுவிதமான விமர்சனங்களையும் இந்த பதிவில் அலசியுள்ளேன்.

கவிஞர்.சேலம்.தமிழ் நாடன்


வானம்பாடி கவிதை இயக்கத்தின் முன்னணி கவிஞர்களில் ஒருவர் சேலம். தமிழ் நாடன். நதியை தாய் என்று கவிஞர்கள் விளிப்பது தொன்று தொட்டு வரும் மரபு. தான் பிறந்த பொன்நாட்டை அன்னையின் வடிவமாய் தாய் நாடு என்று நாம் அனைவரும் அழைக்கிறோம்.
ஆனால் இந்த ஒட்டுமொத்த உலகையும் "அம்மா அம்மா " என்றழைத்து நவயுக சிந்தனைக்கு நடவு நட்டவர் கவிஞர். சேலம் தமிழ் நாடன்.
கவிஞர் , தொல்லியல் அறிஞர் , மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், ஓவியர் என்று பன்முக ஆற்றலை வெளிப்படுத்திய ஆபூர்வ கலைஞர்.
தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வு கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில்
நடந்த கவியரங்கம். புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் முதன்முதலில் மேடை ஏறிய அரிய நிகழ்வு.

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவியரங்கில், கவியரங்க தலைமை கவிஞர். கவிக்கோ அப்துல் ரகுமானை பார்த்து,

அன்பிற்குரியவரே, அப்துல் ரகுமானே!
நான் உங்களை வாழ்த்த வரவில்லை .
வாழ்த்தி பாடப்போவதுமில்லை.
நான் மனிதனை பாட வந்தேன்
மனிதனுக்காய் பாட வந்தேன்.

என்று கவிதை முழக்கம்
செய்தார் கவிஞர் சேலம் தமிழ்நாடன்.
புதுக்கவிதை என்று பெயர் சூட்டிய பின்பு,
அதன் உருவம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் புத்தாக்க சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு புரட்சியாளர் கவிஞர் சேலம் தமிழ்நாடன்.
சேலத்தில் தமிழ் ஆசிரியராகவும், ஓய்வு பெரும் போது  தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தமிழ்நாடன் இடைப்பட்ட தன்பணி நாளில் பல்கலைக்கழகங்களில் பேராசிரிய பணி செய்ய முயற்சித்த போது இவர் ஒரு தீவிர மார்க்சீயவாதி எந்த காரணத்தை மனதில் கொண்டு புறக்கணிப்பு செய்தன அதிகார மட்டங்கள்.
அதற்காக தமிழ்நாடன் கலங்கவில்லை. தன் இலக்கிய பணிக்கு கிடைத்த சரியான அங்கீகாரமாகவே நினைத்தார்.

கவிக்கோ.அப்துல் ரகுமான்

கவிக்கோ. அப்துல் ரகுமானின் கவிதை தொகுப்பான "சுட்டு விரல்" நூலை பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்தில் ஏற்க மறுக்கின்றன என்றோரு செய்தியை கண்டேன். அந்த கட்டுரையில், இது அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை எண்ணத்தின் வெளிப்பாடு என்று குமுறியிருந்தார்கள்.
சில வருடங்களுக்கு பின்பு, நான் கவிக்கோ. அப்துல் ரகுமானின் அந்த கவிதை தொகுப்பை வாசிக்க நேர்ந்த போது அதிர்ச்சியடைந்தேன்.
அதில் ஒரு கவிதையில்,

மக்கள் திலகம்  எம்.ஜி .ஆர் அவர்களின் மறைவுக்கு பின்னர் நிலவிய தமிழக அரசியல் கள நிலவரத்தை தன் கவிதையில் விளக்க வந்த கவிஞர்,

“இரண்டு பெட்டை நாய்களை சுற்றியே
மற்ற நாய்கள் எல்லாம் சுற்றிவரும்”
 
என்ற வரிகளின்முலம் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டார்.
நாடறிந்த கவிஞர். தமிழ் அறிஞர்.அவரிடம் இருந்தா இப்படி பட்ட ஆணாத்திக்க கருத்துக்கள் என்று எண்ணிய எனக்கு தலையே சுற்றியது.
தி.மு .க வையும் தலைவர் கலைஞரையும் ஆதரிப்பதுதான் அவர்நிலை எனில் அதை அவர் தாராளமாக தன் கவிதையில் பதிவு செய்யலாம்.
நம் போன்றோருக்கு யாதொரு எதிர்நிலையும் இல்லை.
அதேபோல் அ.தி.மு.க வின் அதிகார சண்டையையும் அவர் எதிர்ப்பதில் நெல்முனை அளவும் முற்போக்காளர்கள் எதிர்நிலை எடுக்க போவதுமில்லை.
ஆனால் அதை ஒரு ஆணாதிக்க தொனியில் அவர் பதிவு செய்வதே என் போன்றோருக்கு குமட்டுகிறது.
இந்த நேரத்தில் கவிதையுலகில் அவரது சாதனைகளையோ, உலக இலக்கியங்கள் அனைத்தையும் தனது "ஜூனியர் விகடன் " கட்டுரை மூலம் சமூகத்தின் கடைக்கோடி பிரிவிற்கும் எடுத்து சென்ற அவரது எழுத்து வன்மையையோ மறுக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் அறவே இல்லை.
(ஒரு ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ரகுமானின் "ஜூனியர் விகடன் " இலக்கிய கட்டுரை தொடரை வாசித்து கொண்டிருந்ததை நேரில் கண்டு வியந்தவன் நான் .)

மக்கள் திலகம் எம் .ஜி .ஆர் மறைவுக்கு பின்னதான அரசியல் நிகழ்வுகளுக்கு பின் நடந்த தேர்தலும் அதை ஒட்டிய சூழலுமே கவிஞரின் கவிதைக்கான சூழல்.
இந்த நிலையிலேயே கவிஞரின் ஆணாதிக்க தொணிகொண்ட கவிதை இடம்பெறுகிறது. கவிஞர் ஆதரிக்கும் கலைஞர் தலைமையிலான அரசே 1989 இல் ஆட்சி கட்டிலில் ஏறிய பின்பு , பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் ஆண்களுக்கு நிகரான பங்கு உண்டு என்ற பெரியாரின் இலட்சிய கனவை நிறைவேற்றியது.
இதில் கவிஞரின் தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டையும் , கவிதையின் வெளிபாட்டையும் காண்கிற எனக்கு இது ஒரு நகை முரணாவே மனதில் பதிகிறது.
மகாகவி .பாரதியார்


“பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே
வெள்ளை பரங்கியை துரை என்ற காலமும் போச்சே”
-என்ற வரிகளுக்காக மகா கவி பாரதி, எழுத்தாளர் கல்கி அவர்களால்
விமரிசிக்க பட்டார். கவி. பாரதியின் கவிதைகள் சிலவற்றில் ரசகுறைவான வார்த்தைகள் உள்ளன. ஆதலால், அவரை கவிஞர் என்று ஏற்கலாம். மகாகவி என்றழைப்பது எனக்கு உடன்பாடான நிலைப்பாடு அல்ல என்றார் கல்கி.
கல்கியின் இந்த விமரிசனத்திற்கு எதிராகவே புரட்சி கவிஞர்.பாரதிதாசன் "பாரதி உலகப்பெரும்கவி" எனத்தொடங்கும் கவிதையை எழுதினார்.


என்னை பொறுத்தவரை அந்த கவிதையின் மூலம் பாரதி எந்த குறிப்பிட்டசமூகத்தையும் தாக்கவில்லை.பார்ப்பான் என்பது சாதியை குறிக்கும் ஒரு சொல்."அய்யர் "அல்லது "அய்யன் " என்ற நிலை ஒருவரின் வாழ்நாளில் அவரின் அரிய  செயல்களின் மூலம் அடைவது.


நாடு விடுதலை அடைந்தால்  போதாது. இத்தேசம் சமூக விடுதலையும் அடையவேண்டும் என்ற நிலையையே பாரதி அந்த கவிதையில் பதிவு செய்கிறார்.இந்தியா விடுதலை பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம் என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே"
என்று பாரதி எழுதியுள்ளமை பாரதியின் தீர்க்கதரிசனத்தை மட்டுமல்ல. அவரின் தத்துவகொண்டாட்டத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
ஏ ! ஏகாதிபத்தியமே !
நீ என்ன செய்வாய் ?
மனிதனை அடிமை கொள்வாய்!
மனிதனின் சுதந்திர நினைவுகளை
என்ன செய்துவிட முடியும்?
காற்றை எங்காவது
கைது செய்ய முடியுமா?
-என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையும்
பாரதியின் தத்துவகொண்டாட்டத்தை ஒத்த சிந்தனையையே உள்ளடக்கியது.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள்
மட்டும் விளங்கட்டுமே!
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே!
என்ற கவிஞர் வாலியின் திரைப்படப்பாடலும் இதே தத்துவகொண்டாட்டத்தையே பறைசாற்றுகிறது.

















No comments:

Post a Comment