Thursday, August 23, 2018

கண்ணீர் திரையிட்ட கண்கள்


சின்ன செடியும் அது சிந்தும் 

புன்னகையும் இப்போது அங்கில்லை

கண்ணீர் திரையிட்ட கண்களும்

வெள்ளத்தில்  மிதக்கும் வாழ்க்கையும்

மட்டுமே இப்போது அங்குண்டு

ஒரு கோடி மழைத்துளி ஊசி கொண்டு
குத்தி குத்தியே குதறப்பட்டிருக்கிறது
என்னருமை சகோதர கேரளம்

கவிழ்க்க பட்ட நீர்குவளை
உருவாக்கிய  நவீன ஓவியமாய்
உடைந்து சிதறிய இராட்சத மாளிகையின்  துண்டுகளாய்
இப்போது அந்த மாநிலம்

கடவுளின் தேசத்தை
இயற்கை பூதம் வேட்டையாடிவிட்டது

எல்லாம் பெருமழை நீரில்
மூழ்கியபின்பு
அதில் தத்தளித்து கொண்டிருக்கிறது
அம்மக்களின் நிகழ்காலமும்
ஓராயிரம் கேள்விக்குறிகளை ஏந்தியபடி எதிர்காலமும்



அவசர மையங்களை நோக்கியே
அலைபாயும்
கண்ணீர்  அழைப்புகள்
திரும்பிய பக்கமெல்லாம்
காற்றில் திட்டுத்திட்டாய்
அழுகுரல்கள்




வெள்ளம் சூழ்ந்த மருத்துவமனைகளின்
உள்ளே இன்றோ நாளையோ
பிறக்க போகும் உயிர்கள்

வெள்ளம் சூழ்ந்த வீடுகளின் உள்ளே
இறந்த உடல்களுக்கு அருகில்
காவல் காக்கும் சில துர்ப்பாக்கிய மனிதர்கள்

கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள்
என அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
மக்கள் தஞ்சம் அடைந்து தவித்து அழும்
இப்பொல்லாத வேளையில்
கண்ணை மூடிக்கொண்டு கடவுளர்கள்
வெளியேறிவிட்டனர்
மதவெறிகொடுக்குகள் மட்டும்
இணையத்தின் இண்டு இடுக்குகளிலும் புகுந்து
விஷம் கக்க தொடங்கியுள்ளன

பாடைகளையும்
அரசியல்  மேடைகளாக்கிவிடும்
இந்த எத்தர்களை காண நடுங்கி
கண்ணை மூடிக் கொண்ட சூரியனும்
மேகங்களுக்குள் பதுங்கி கொண்டதால்
இப்பொழுதும் அங்கே தொடர்கிறது
மழையின் நர்த்தனமும்  
இருட்டின் கும்மாளமும்


அங்கே
பெரியாறும் சாலக் குடியாறும்
ஆக்ரோஷமாகப் பாயும் போது
இங்கே
கரைபுரண்டோடும் காவேரி பெண்ணாள்
கடைமடை பகுதிகளுக்கு
கண் ஜாடை காட்ட மறுக்கிறாள்

அரவணைத்து முத்தமிடும்
அன்னையாய் இருந்த
இயற்கை
கையில் பிரம்பை தூக்கிக்கொண்ட
ஆசிரியராய் புது அவதாரம் எடுத்தபின்
இனி நாம்
என்ன பாடம் கற்கப்போகிறோம்?

என்ன செய்யப்போகிறோம்?




 




No comments:

Post a Comment