Sunday, November 3, 2019

என் நண்பன் மனோகர் ஒரு கவிஞன்


நம் வாழ்வில் நாம் காணும் மிக பெரிய கவிஞர்கள் மட்டுமல்ல ஏனையோரும் கவிதை உணர்வு மிக்கவர்களே.
ஒட்டு மொத்த பைபிளின் வரிகளும் கவிதைகளே என்று குறிப்பிடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
அதைப்போலவே வள்ளலார் அருளிய திருஅருட்பாவும் கவிதைகளே .
இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களில் வள்ளலாருக்கும் ,தாயுமானவருக்கும் முக்கிய இடம் உண்டு .
இவை எல்லாம் பக்தி இலக்கியம் என்ற பிரிவில் வருபவை .
இதைப்போலவே பொது மக்கள் பேசும் பேச்சுக்களிலும் கவிதையின் கூறுகள் விரவி உள்ளதை நாம் பல தருணங்களில் உணர முடியும்.
அந்த வகையில் என் நண்பன் மனோகரும் ஒரு கவிஞனே .
அதை அவரே உணரவில்லை என்றாலும் நான்அதை உணர்ந்திருக்கிறேன் .
நானும் என் நண்பன் மனோகரும் ஒன்றாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது ஒரு நிகழ்வு நடந்தது.
என்னோடு பாலிடெக்னிக் படித்த நண்பன் அங்கே ஒரு வேலையாக வந்தார் .
அவரிடம் பழைய நண்பர்களை பற்றியெல்லாம் நான் விசாரித்தேன்.
உலகின் பல்வேறு  பகுதிகளில் என்னோடு படித்த நண்பர்கள் விரவி இருப்பதையும், அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த பழைய இனிய நினைவுகளை என் நண்பன் மனோகரிடம் பகிர்ந்து கொண்டேன் .

அதற்கு பதிலுரையாக என் நண்பன் மனோகர் ,

மலையில் இருந்து வேகமாக புறப்பட்டு வரும் அருவி, அந்த பெரிய பாறையை உடைத்து சின்னஞ்சிறு கூழாங்கற்களாக மாற்றி நதியின் ஓட்டத்தில்
பல்வேறு ஊர்களில் சிதறடித்து விடுவது மாதிரி படிக்கும் கல்லூரி வாழ்க்கையும் வேலை தேடி வரும் வாழ்க்கையும் மாறி விடுகிறது என்றார்.
இந்த உவமை பொருத்தமானது மட்டுமல்ல . கவிஞர்களுக்கே உரிய புலமைமிக்கது .
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மரணத்தை பற்றிய பேச்சு வந்த போது ,
உலகில் கோடான கோடி மனிதர்கள் பிறக்கிறார்கள் . அவரவர் காலம் முடிந்ததும் இறக்கிறார்கள்.
இந்த மிக பெரும் தொடர் நிகழ்வு,
ஒரு தொடர்வண்டி நிலையத்தில் நிற்கும் தொடர் வண்டியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏறுகிறார்கள் வேறு சிலரோ இறங்குகிறார்கள்.
இதை போன்று தான் இந்த பூமியில் நிகழும் பிறப்பும் இறப்பும் இருக்கிறது என்றார் .
அவரின் கலை வித்தகம் நிறைந்த பேச்சை கண்டு வியந்து போனேன் .


No comments:

Post a Comment