Monday, October 1, 2018

புல்வெளியில் ஒரு புது வசந்தம்


 


புல்வெளியில் ஒரு புது வசந்தம்

பனித்துளியால் அதற்கொரு மணிமகுடம்

 

இரவின் கண்ணீர் சிந்தியதோ?

நட்சத்திரங்கள் மண்ணில் சிதறியதோ?

இருளின் கையெழுத்தோ ?

இரவின் கால்தடமோ  ?

 

பூமியின் பலவர்ணம்

எல்லாம் இறைவியின்  கைவண்ண ஜாலம்

பச்சை நிறத்தில் சேலை கட்டி

நிலவை பொட்டாய் வைத்தாளோ ?

 

புல்வெளியில் ஒரு புது வசந்தம்

மலர்களை தூவி வாழ்த்துகிறது

கண்களில் மலரும் ஆசைகளில்

காதல் காவியம் ஓன்று தெரிகிறது

 

 

காலம் காட்டும் கடிகாரம் வானில்

சந்திர சூரியராய் ஒளிர்கிறது

அதிகாலையை காட்டும் கண்ணாடி

புல்வெளிமீது பனித்துளியாய் சிரிக்கிறது

 

விலங்குகள் நடந்தால் புல்வெளிக்கு

ஆபத்து ஒன்றும் நேராது

மனிதன்  நடந்தால் புல்வெளியில்

பாதை  ஓன்று தெரிகிறது

 

சாலையில் நடக்கும் மனிதர்களே!

புல்வெளியை உற்று பாருங்கள்

எதையெதையோ தேடி அலைகின் றீர்!

கடைசியில் புல்வெளியில் தானே புதைகின்றீர்!

 

புல்வெளியில் ஒரு புது வசந்தம்

பனித்துளியால் அதற்கொரு மணிமகுடம்

பனித்துளியில் உலகம் தெரிகிறதே!

பனித்துளிதான் வாழ்க்கையென்று புரிகிறதே!

No comments:

Post a Comment