Monday, October 1, 2018

சில ஏக்கங்கள்


சில நிகழ்வுகளை நாம் பத்திரிகைகளில் வாசிக்கும் போது இப்படி நிகழ்ந்து இருக்க கூடாதா? என்ற ஏக்கம் நமக்கு எழும்.

அப்படி என் மனதை பாதித்த சில ஏக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் சிறு முயற்சியே இந்த கட்டுரை .



கவிஞர் கண்ணதாசன் "அவள் ஒரு தொடர்கதை " திரைப்படத்திற்காக எழுதிய பாடல்தான்

“தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என தொடங்கும் பாடல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த ஒரு இளைஞன்  இந்திரைப்படத்தின் கதாநாயகன் .

அவனால் அந்த குடும்பத்திற்கு எந்த பொருளாதார பயனும் இல்லை .

ஆதலால் அவனுடைய தங்கையே  குடும்பத்தின்  தலைமை பொறுப்பை ஏற்கிறாள் .   

இயலாமையாலும் , அவமானத்திலும் புழுங்கும் நாயகன் தத்துவத்தின் மடியில் தலைசாய்க்கிறான்.


அவன் இதயத்தின் ஓரத்தில்  இருந்து வரும் எண்ணங்கள்

சித்தர்களுடைய  பாடலின் சாயலில் இருப்பது மிக பொருத்தம் என்று முடிவு செய்திருக்கிறார்  இயக்குனர் சிகரம் பாலசந்தர் .

ஒரு செய்தியை எதிர்மறையாக சொல்லி, அதை நியாயப்படுத்தும் போக்கில் சித்தர் பாடல் மாதிரி இருக்கணும் கவிஞரே என்றாராம் இயக்குனர் சிகரம் பாலசந்தர் .

கவிஞருடைய  ஒரு நாளின் மத்திய நேர தூக்கம் இந்த பாடலுக்காக தியாகம் செய்யப்பட்டது என்கிறார் ராம .கண்ணப்பன் .(கவிஞரின் உதவியாளர்)

மொத்தம் நாற்பத்தியிரண்டு சரணங்களை கவிஞர் எழுதியதாக ராம .கண்ணப்பன் பதிவு செய்கிறார்.

நாற்பத்தியிரண்டு  சரணங்களில் இரண்டை தேர்ந்தெடுத்த இயக்குனர் சிகரம் பாலசந்தர்,

அதை ஒலிப்பதிவுக்கு தந்தார் .

மீதி நாற்பது சரணங்களும் எங்கே போயின ? என்பதே என்  இதயத்தை குடையும் கேள்வி

அவற்றை பாதுகாத்து வைத்து இருந்தால் தமிழ் சித்தர் மரபின் தத்துவ விசாரங்களின்

சாரமாக காலம் காலமாய் நிலைத்து இருக்குமே?

தத்துவத்தை தீண்டாமல் தள்ளி நிற்கும் எளிய மனிதர்களையும் எட்டி இருக்குமே? என்று ஏக்கத்தோடு நினைத்து பார்க்கிறேன்.


ஜெயலலிதா அம்மையார் சென்னை கடற்கரையில் இருந்த கண்ணகியின் சிலையை
போக்குவரத்துக்கு இடையூறு என்று கூறி அகற்றிய போது கவிஞர் மீராவின் மனைவி கவிஞரிடம் அதுகுறித்து கேட்டிருக்கிறார்.  



அந்த கேள்வியின் விளைவாக,
ஒட்டுமொத்த சிலப்பதிகாரத்தையும் ஒரு மணி நேரத்தில் தன்  வாய்மொழியில் கவிஞர் மீரா தன் மனைவிக்கு கதையாக சொன்ன நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
கவிஞரின் அந்த சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்திருந்தால்,
இளங்கோவின் காப்பியத்தை இக்காலத்தின் கவிஞர் மீராவின் வார்த்தைகளில் தமிழ் உலகம் காலம்காலத்திற்கும் கேட்டுக்கொண்டே இருந்திருக்குமே என்பது என் நெஞ்சின்
ஏக்கங்களில் ஓன்று .



சங்கர மடத்தின் மடாதிபதி ஒருவர் வள்ளலாரை சந்தித்த போது “சம்ஸ்க்ருதம்தான் என் தாய்மொழி " என்றும் தமிழ் மொழிக்கு மூலமே சம்ஸ்க்ருதம்தான் என்றும் வாதாடி இருக்கிறார்.
இந்த திமிர் வாதத்தால் கோபம்கொண்ட வள்ளலார், தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பை பற்றியும் சுமார் ஒரு மணி நேரம் வாதாடி இருக்கிறார் . முடிவில் “சம்ஸ்க்ருதம் உங்கள் தாய்மொழி” என்றால் , “தமிழ் எங்கள் தந்தை மொழி”  என்பேன் என்று  என்று திடமாக பதிவு செய்திருக்கிறார் .
அன்று வள்ளலார் தமிழின் தொன்மை குறித்தும் சிறப்பை குறித்தும் ஆற்றிய உரையை உரைநடையாக காப்பாற்றி வைத்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு மிக பெரிய ஆவணமாகஇருந்திருக்குமே? என்ற எண்ணம் என்னை துன்புறுத்தி வருகிறது .
    




 




 

No comments:

Post a Comment