Translate

Thursday, May 31, 2018

மூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்அதோ பாருங்கள்! மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம்.

இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில்

அமைதியாக நித்திரை கொள்ளும் ஊர்.

எங்கும் அமைதி. ஏகாந்தமான இனிமை.

தலை அசைத்து, தலை அசைத்து குதூகலிக்கும் மரம்செடிகொடிகள்.

அந்த இலக்கிய மாளிகையின் மொட்டைமாடியில் மூவர் தன்னை மறந்த லயத்தில். . .

நேற்று, இன்று, நாளை என்ற கால கிறுக்கலை அழுத்தி துடைத்து விட்டு முக்காலத்தையும் ஒற்றை கவிதை ஆக்கிய மோன நிலையில். . .

கற்பனைதான்.

இவையெல்லாம் கற்பனைதான் என்றாலும் அந்த மூவரும் நிஜம்.

அவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதிய கவிதைகள் உண்மையிலும் உண்மை.


உண்மையை மறைக்க பொய் கூறும் உலகினில் பொய் கற்பனையை கூறி உண்மையை தரிசிக்கும் புதிய அனுபவம்.
அந்த மூவரில் .  .  .
ஒருவர் மகாகவி. பாரதியார்
இன்னொருவர் கவியரசு .நா.காமராசன்
மற்றும் ஒருவர் புதுக்கவிதை தாத்தா . மு.மேத்தா
இந்த இன்ப நிலையை மூவரும் வார்த்தைகளுக்குள் சிறைப்படுத்த நினைக்கின்றனர்.


மகாகவி. பாரதியார் சொல்கிறார்:
பட்டு கரு நீல புடவை பதித்த நல்வைரம்
நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!

கவியரசு .நா.காமராசன் சொல்கிறார்:
காயம்பூ கருக்கிட்டு அவ கண்ணு இரண்டும்
மின்விளக்கு ஆகாசம் சிரிச்சிருக்கு அங்கெ ஆயிரம் பூ மலர்ந்திருக்கு.


புதுக்கவிதை தாத்தா . மு.மேத்தா சொல்கிறார்:
நூறு நூறு தீபமாய் வானில் அன்று கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை.

நாங்களும் அவர்களும்


நாங்கள்

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத

கர்நாடகாவை எதிர்த்து

போராடிக்கொண்டிருந்தோம்.

 

அவர்கள்

காவேரியில் இருந்த

மணலையெல்லாம் அள்ளி

கடத்திக்கொண்டிருந்தார்கள்.

 

நாங்கள்

மணல் கொள்ளையை கண்டித்து

மறியல் நடத்த முற்பட்டபோது,

 

அவர்கள்

மலைகளையும் குடைந்து

பண புதையலை அள்ள

பக்காவான திட்டம்

தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள்
எங்களின் முதலமைச்சரின்
மர்ம மரணத்திற்கு மனம் கலங்கி
நீதி மன்றங்களின் கதவுகளை
தட்டிக்கொண்டிருந்தோம்.
 அவர்கள்
தங்களின் தலைவி
மர்மமாய் மறைந்த கண்ணீர் ஆறும் முன்னே
பதவிச்சண்டை இட்டுக்கொண்டு
தங்களுக்குள்
உதைகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
 ஒட்டுமொத்த காவிரி டெல்ட்டாவும்
பட்டுபோய் பாலைவனமாகும் சோகத்தில்
எங்கள் விவசாயிகள் தலைநகர் டெல்லியில்
ஒப்பாரி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது

இங்கே அவர்கள்
கூவத்தூர் சொகுசு விடுதிகளிலே
ஆனந்த நடனமாடி அகமகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள்
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்திய பின்பு
எத்தனையோ நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி ஏறி
எங்கள் கால் செருப்புகள் தேய்ந்தபின்பு
எங்களில் பலர் இருமி இருமி செத்த பின்பு
புற்று நோயால் தீப்பற்றி பலர் தேகம் தீய்ந்த பின்பு
ஊற்றெடுக்கும் கண்ணீரை துடைத்தபடி
எங்கள் முத்து நகரை காப்பாற்றும் முயற்சியாக
பேரணியாய் ஆட்சியர் மாளிகை நோக்கி நடக்கும் வேளையில்

அவர்கள்
அனுப்பிய காவல் வீரர்கள்
நிராயுதபாணிகளான எங்களை தீர்த்து கட்ட
துப்பாக்கிகளை தூக்கி பிடித்தார்கள்.

முத்து நகர் மண்ணில்
எங்களின் வாழ்க்கை போராட்டம்
இரத்த கோலம் போட்டது.

நாங்கள்
அவர்களை
அரசியல்வாதிகள் என்றே
இன்றுவரை
அன்போடு அழைக்கிறோம் .
 அவர்கள்தான் எங்களை
சமூக விரோதிகள் என்று சொல்லி
சங்கடப்படுத்துகிறார்கள். 

 

 

 


Wednesday, May 30, 2018

ஆன்மீக அரசியல் வித்தகர்


எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடுமாம் ஆன்மீக அரசியல் வித்தகரின் அறிவிப்பு இது.

எல்லாவற்றிக்கும் போராடும் நிலையில் மக்களை தள்ளியது யார்?

மக்கள் போராடக்கூடாது என்கிறீர்களே!

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும்  உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறி ஏறி இந்த நாசகார ஆலையை தமிழ்நாடு மீது திணிக்க படும் பாடு படுகிறார்கள்?

அணில் அகர்வாலிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

மகாராஷ்டிரா, கோவா, குஜராத் இந்த மாநிலத்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிராக போராடவில்லையா?

அவர்களிடம் போய் உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்க வேண்டியதுதானே?

எல்லாவற்றிக்கும் போராட்டம் தீர்வாகாது. நீதி மன்றங்களை நாடுங்கள் என்று கூறுகிறீர்களே!

நீதி மன்ற உத்தரவுகளை எந்த அரசு மதித்து செயல் படுகிறது?

தேசீய நெடுஞசாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி எத்தனை முறை உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்பும்,சட்டத்தின் சந்து பொந்துகளை (நெடுஞசாலைகளில் இருந்து 100அடி தள்ளி சாராய கடைகளை அமைத்து) பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துகிறது மாநில அரசு.

காவேரியில் நம் பங்கை தர சொல்லி உச்ச நீதி மன்றம்  எத்தனை முறை உத்தரவிட்டது ?

கர்நாடக மாநில அரசு அந்த உத்தரவை மதித்ததா ?

 மைய அரசு கர்நாடக அரசை வற்புறுத்தியதா ?

இந்நிலையில் தமிழ் மக்கள் போராடுவது சரியா ? இல்லையா ?
ஆன்மீக அரசியல் வித்தகர்தான் பதில் கூறவேண்டும்.
சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கினால் நான் பொறுக்க மாட்டேன் .

உங்கள் வாதப்படி தாக்கியவர்களை திருப்பி தாக்க வேண்டியதுதானே ?

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், காலுக்கு கீழே சுடுதல், ஆகாயத்தை நோக்கி சுடுதல் இத்தனை வாய்ப்புகள் இருந்தும்,

குறி பார்த்து சுட்ட கொடூரம் ஏன்?


சமூக விரோதிகள் நச்சு கிருமிகள் அதிகரித்து விட்டார்கள்.

அரசு அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அங்கே சுடப்பட்டவர்களில் ,படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரேனும் நீங்கள் பட்டியலிட்ட (காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தல், ஆலை பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு  தீ வைத்தல்) குற்றங்களை செய்ததற்கு  ஆதாரம் உண்டா ?

நீங்கள் சொன்ன சமூக விரோதிகள் யார் ? இப்படி பொது சொத்துக்களுக்கு தீ வைப்பதால் அவர்கள் சாதித்ததென்ன ? அவர்களை இன்னுமா கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை ?

ஸ்டெர்லைட் ஆலை சுற்று சூழல் விதிகளை மீறி உள்ளது .100 கோடி அபராதம் கட்டவேண்டும் என்று கடைசியாக தந்த தீர்ப்பில் தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 ஆனால் ஆலை அதிபர் அணில் அகர்வாலோ,

 ஆலையால் சுற்று சூழல் மாசுபாடு என்பது போராளிகள் என்ற பெயர் கொண்ட தேச விரோதிகளின் பொய் பிரசாரம் என்று முதலை கண்ணீர் வடிக்கிறார்.
ஆன்மீக அரசியல் வித்தகரை விடவும் அவர் பெரிய வித்தகராக இருப்பார் போலிருக்கிறது.
கொஞ்சம் நாமெல்லாம் அயர்ந்தால்,

முழு பூசிணிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைப்பவர்களுக்கு மத்தியில்,

இமய மலையையே ஒரு கவளம் சோற்றில் மறைத்துவிடுவார் போலிருக்கிறது.


போராடும் நம் தமிழ் மக்களை பார்த்து,

ஆன்மீக அரசியல் வித்தகர் சமூக விரோதிகள் என்கிறார்.

ஆலை வித்தகர் தேச விரோதிகள் என்கிறார்.

இந்த அட்டுழியங்களை பார்க்கும் போது,

எனக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

 
நாக்கை சுழற்றினால்


நாச சக்தியாம்.

பேசவே கூடாதாம்

பிரிவினை வாதியாம்.

உலையில் தான்

அரிசி பொங்க வேண்டுமாம்

உள்ளத்தினால் யாரும்

பொங்கவேகூடாதாம்

தமிழா! தமிழா!

அகராதி ஓன்று புதிதாய் வாங்கு!

அர்த்தங்கள் புரிந்தபின்

சுகமாய் தூங்கு!

Tuesday, May 29, 2018

அரசியல் தத்துவம்உலை தகிப்பாய்

உடலை பதம் பார்க்கும்

உச்சி வெய்யில்

 

கட்சி ஊர்வலத்தில்

கடைக்கோடியில் வந்தவன்

ஓரமாய் ஒதுங்கி

வேடிக்கை பார்த்தவனை

நோக்கி வினா தொடுத்தான்:

அய்யா!

நீங்கள் வலது சாரியா?

அல்லது இடது சாரியா?கேள்வியால் கிறுகிறுத்து போனவன்

பரிதாபமாக பதில் சொன்னான் :

ஒன்றும் புரியவில்லையே!

நான் ஒரு பாதசாரி.


Monday, May 28, 2018

வர்ணாசிரமத்தின் தாலி

மகாகவி பாரதியை பற்றி  பாராட்டி பல்வேறுபட்ட கவிஞர்கள் எழுதிய பாராட்டு கவிதைகளின் தொகுப்பு "பாரதீயம்" என்றோரு கவிதை நூல்.
அந்த நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதையை பற்றி சில எண்ணங்களை பகிரும் முயற்சி இந்த சிறு கட்டுரை .
பாரதி
நீ ஒரு
தாழ்த்தப்பட்டவனுக்கு
பூணூல் அணியச்செய்தாய்
வர்ணாசிரமத்தின் தாலி
அறுக்கப்பட்டது
என்று பாரதிக்கு கவிமாலை சூட்டுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.


இது எப்படி என்பது நமக்கு புரியவில்லை.
ஆசிரமம் என்றால் படி நிலை என்று பொருள்.
மிக உயர்ந்த சாதிகள் என்றும்
அதற்கடுத்த உயர் நிலை சாதிகள் என்றும்
பிறகு இடைநிலை சாதிகள் என்றும்
கடைசியில் கடைநிலை சாதிகள் என்றும்
மக்களை பிரித்து ஏற்ற தாழ்வுகளை கற்பித்து
 சிலர் வாழ ,சிலர் ஆதிக்க வெறியுடன் ஆள
பலர் மீளா துயரில் மாள அவமான படுகுழியில் சாக

ஏற்படுத்த பட்ட அட்டூழிய சமூக அமைப்பே சாதீய கட்டுமான அமைப்பு.
இதன் பேய் கரங்கள் கடைக்கோடி கிராமங்களில் இரட்டை குவளை முறை, ஆலய நுழைவு மறுப்பு என்று நீள்கிறது என்றால், பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் மர்ம மரணங்கள் வரை தொடர்கிறது.
"சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் பூணூல் அணிவித்து, காயத்திரி மந்திரத்தை சொல்லி தந்து விட்டால் போதும் சமூக ஏற்ற தாழ்வு நீங்கிவிடும்" என்ற பாரதியின் கூற்று நகைப்புக்கு இடமானது மட்டுமல்ல, நடைமுறைக்கு உதவாதது.
அது சரி. இன்னும் இங்கே நம் ஆதிக்க சாதி காயத்ரி ரகுராம்கள் "சேரி பிஹேவியர் " என்று வார்த்தை வன்முறை தொடுத்து  கொண்டிருக்கிறார்களே! பாரதி இன்று மீண்டும் இங்கே வந்தால் , தலித் சகோதரர்களுக்கு பூணூல் போடும் வேலையை பார்த்து கொண்டிருக்கமாட்டார். சமூகத்தின் அணைத்து வகுப்பினருக்கும் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரம் சொல்லி தருவேன் என்ற பாரதி பிக் பாஸ் காயத்ரிகளுக்கு சமூக நீதி பாடம் எடுத்துக்கொண்டிருப்பார்.


சமூகத்தில் உள்ள பிற வகுப்பினர் பூணூல் அணிவதுதான் புனிதம் என்று நினைத்தால், சாதீய ஏற்ற தாழ்வுகளையும் அதன் கற்பிதங்களையும் சேர்த்தே ஏற்கிறார்கள் என்றே பொருள்.


எல்லா வேலைகளும் சமம். யார் வேண்டுமானாலும் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே தலைமுறை தலைமுறையாக செருப்பு தைக்க வேண்டும் என்று சொல்வதும் அவர்களை கோவிலுக்குள் விடாமல் தடுப்பதும் எந்த வகை நியாயம்.
இதற்கு தீர்வென்ன?ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே தலைமுறை தலைமுறையாக மலம் அள்ள வேண்டும் என்று சொல்வதும் அவர்களை கோவிலுக்குள் விடாமல் தடுப்பதும் எந்த வகை நியாயம்.


இதற்கு தீர்வென்ன?

இவர்களுக்கெல்லாம் பாரதி மட்டும் பூணூல் அணிவிப்பது இவர்களின் வாழ்க்கையில் என்ன மறுமலர்ச்சியை  கொண்டு வரும்?
அதுவும் கூட பாருங்கள் பாரதி மட்டும் தான் செய்தார்.
இன்றளவும் பிற சமூகத்தினர் கடவுளை வழிபாடு செய்யும் உரிமையை அரசு தந்த பின்பும் ஆதிக்க சாதிகள் தர மறுக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு பூணூல் அணிய செய்ய முடிந்த பாரதியால்
ஒரு உயர்சாதி மனிதனை கொண்டு செருப்பு தைக்கவோ, மலம் அள்ளவோ
ஏற்பாடு செய்ய முடிந்ததா ?
இங்கே இதுதான் சிக்கல்.
ஓன்று உயர் சாதி மக்கள் அனைத்து வேலைகளும் சமம் என்ற புரிதலுக்கு வரவேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தான் செய்யும் வேலை எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல என்ற எண்ணமும்,
அதே வேலையில் தான் விரும்பினால் மற்ற வேலைகளுக்கு தானோ தன் தலைமுறையோ மாறிக்கொள்ளும் உரிமை உண்டு என்கிற எண்ணம் பெறவேண்டும்.
ஆலய நுழைவு , ஆண்டவன் வழிப்பாடு , கோவில் திருவிழாக்கள், கலை இலக்கிய அரசியல் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளில் மற்ற பிரிவினர் போல் கலந்துகொள்ளும் உரிமை அடைவதே சமூக நீதி.
இந்த சமூக நீதிக்காகவே இங்கே தந்தை பெரியாரும் , வடக்கே அண்ணல் அம்பேத்காரும் இறுதிவரை முழு மூச்சுடன் போராடினர்.

தமிழர்களுக்கு என்று ஒரு ஆன்மிக பாரம்பரியம் உண்டு
அவர்கள் நெடுங்கால வழக்கப்படி எல்லை தெய்வங்களையோ (அய்யனார் , சுடலமாடன்சாமி , கருப்பன் சாமி)
அல்லது பெண் தெய்வங்களையோ (மாரியம்மன், காளியம்மன் ) போன்ற தெய்வங்களையோ அல்லது வள்ளலார் காட்டிய பெருநெறியிலோ செல்வது சரியா?

பிராமிணர்கள் பத்தினிக்கு பிறந்தவர் மற்றவர்கள் (விரிவான விவரங்களுக்கு பார்க்க என் கட்டுரை  : " பிராமினாள் ஹோட்டல்"- இதே வலை பூவில் ) வேறு மாதிரியான இழி பிறப்பின் மூலம் வந்தவர்கள்  என்று சமூகத்தை நான்கு படிகளாக்கி துண்டாடிய அட்டூழிய வழியில் பூணூல் அணிந்து செல்வது சரியா ?எனவே,
பாரதி

நீ ஒரு

தாழ்த்தப்பட்டவனுக்கு

பூணூல் அணியச்செய்தாய்

வர்ணாசிரமத்திற்கு

அறுபதாம் கல்யாணம் நடந்தது.
என்று வேண்டுமானால் சமூக நீதி உணர்வு கொண்ட நாம் இந்த கவிதையை மாற்றி எழுதி பார்க்கலாம்.
இதோ ஏதோ , பாரதியையும், கவிக்கோ. அப்துல் ரகுமானையும் குறைகாணும் குனிந்த நோக்கம் கொண்டதல்ல.
அவ்விரண்டு மானுடம்பாடிகளை விடவும், மானுடம் பெரிது.
இன்று வடக்கே வரிசையாக பல்கலைக்கழகங்களில் நடக்கும் தலித் மாணவர்களின் மர்ம மரணங்களையும், தமிழ் மண்ணிலே இரத்த கோலமிடும் சாதீய ஆணவ படுகொலைகளையும்


அந்த மாபெரும் கவிஞர்கள் காண நேர்ந்தால் ,
இந்த எளியவனின் விமரிசனத்தை மனப்பூர்வமாக ஏற்பார்கள் என்ற திட நம்பிக்கைகள் எனக்குண்டு.


எழுதுகோலில் எளிமையை ஊற்றி எழுதும் கவிஞன்.“மிகவும் எளிமையாக நீங்கள் கவிதை எழுதுவது, கவிதையுலகில் நீங்கள் வெற்றி பெற செய்யும் தந்திரமா?”

என்று கவிஞர் மு.மேத்தாவிடம் பத்திரிக்கையாளர் ஒரு நேர்காணலில் கேட்டபோது,

கவிஞர் சொன்னார்: தந்திரம் அன்று.

சுதந்திரம். நான் எளிமையானவன். என் கவிதைகளும் எளிமையானவை.

இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே ? என்று என்னை பார்த்து வியந்தவர்கள் தான் உண்டு.

இவ்வளவு கர்வமாக இருக்கிறாரே என்று கோபம் அடைந்தவர்கள் யாரும் இல்லை.

பொதுவாக கவிதையை வகை பிரிக்கும் திறன் ஆய்வாளர்கள் இந்த மாதிரி , முதல் வாசிப்பிலேயே புரிகின்ற கவிதைகளை வெள்ளை கவிதைகள் (white poetries) என்று கூறுவார்கள்.

அப்படி மிக மிக எளிமையாக அமைந்த மேத்தாவின் கவிதைகள் சிலவற்றின் நடை அழகையும், அர்த்த செறிவையும், கற்பனை திறத்தையும் என்னால் முடிந்த வரை இந்த சிறு கட்டுரையில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.


சோவியத் யூனியன் சிதறிய போது, தன் இதயமும் சிதறியதாக தன் கவிதையில் பதிவு செய்யும் மேத்தா அந்த மன அதிர்வை பதிவு செய்ய கற்பனை குதிரையில் ஏறி எங்கெங்கோ செல்லாமல்
மிக இயல்பாக,
சட்டையில் அழுக்கிருந்தால் வெளுத்து பார்க்கலாம் கொளுத்தி பார்க்கலாமா?
               (கனவு குதிரைகள் கவிதை தொகுப்பில் இருந்து )
என்கிறார் .
இந்த கவிதையை போன்றே இணையான கருத்துடைய,
மேத்தாவின் கைவண்ணத்தில் உருவான ,
“சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.”
என்ற "வேலைக்காரன் " திரைப்பாடல் வரிகள் ஏற்கனேவே பிரபலம்.


சோவியத் யூனியன்
லெனின் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் உறை
ஸ்டாலின் காலத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை
கோர்பச்சேவ் காலத்திலோ வெறும் அஞ்சல் அட்டை
               (கனவு குதிரைகள் கவிதை தொகுப்பில் இருந்து )
என்று சோவியத் யூனியனின் வெவ்வேறு காலங்களை
உருவக படுத்தும் மேத்தா அரசியல் துறையுடன் அஞ்சல்துறையை ஒரு சிறு முடிச்சு போடுவதன் மூலம் மிக எளிமையாக தன் கருத்தை வாசகர்கள் மனதில் பதிவு செய்கிறார்.

ஒருவர் என்னதான் கவிதை உலகில் சாதனை செய்தாலும் அவரை இந்த ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.
ஒருவர் திரைப்பட பாடல் எழுதி வெற்றி பெற்று விட்டால், அவருடைய
கவிதைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன.
பெரும்பாலும் இவ்வாறே. விதி விலக்குகள் இருக்கலாம்.
கவிஞர் மேத்தாவே இந்த விசயத்தில் விதி விலக்காகவே இருக்கிறார்.

கவிஞர் மேத்தா திரைப்பட பாடல் துறைக்கு வரும் முன்னரே, "கண்ணீர்ப்பூக்கள்" மற்றும் "ஊர்வலம் " போன்ற கவிதை தொகுப்புகளின் மூலம் ஒரு நாடறிந்த கவிஞனாக உருவாகி இருந்தார்.

மற்றொரு எடுத்துக்காட்டு தமிழ் இசை கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி ஆவார்.
இவர் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு நாட்டுபுற இசைப்பாடல் கலைஞராக அறியப்பட்ட பின்பு திரை துறையிலும் நுழைந்து பின்னணி பாடகராக தன பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார்.


மேத்தா, புஷ்பவனம் குப்புசாமி போன்ற ஆற்றல் மிக்க கலைஞர்களை திரைத்துறையின் புகழ் வெளிச்சம் பாதிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ,ஏனையோர் நிலை அவ்வாறில்லை.
ஒருவர் என்னதான் திறமையை வெளிப்படுத்தினாலும் திரைத்துறையின் அறிமுகம் இல்லாத காரணத்தினாலேயே இந்த மக்களாலும், ஊடகங்களாலும் அடையளாம் காணப்படாமல் போகிற அவலநிலை ஏற்பட்டு விடுகிறது.இதை படகு காரன் பாட்டு என்ற தன் கவிதையில் சொல்ல வந்த கவிஞர் ,
“கப்பலில் வந்த கனதவான்கள்
கைகள் பிசய
இயந்திர படகுகளில் வந்தோரின்
இதயங்கள் கசிய ”
              (“கனவு குதிரைகள்” கவிதை தொகுப்பில் இருந்து )
என்ற வரிகளில் ,

கப்பலை அரசியல் இயக்கங்களுக்கும் , இயந்திர படகை  திரை துறைக்கும் குறியீடாக மிக பொருத்தமாக கையாண்டிருக்கிறார்.


அரசியல் கட்சித்தலைவர்கள் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இடத்திற்கு தகுந்த படி பேசி எந்த வளமும் குன்றாமல் வாழ்கிறார்கள்.
ஆனால் தொண்டர்கள்தான் ஒரு அரசியல் கட்சிக்காக தினம் தினம் உழைத்து
பலன் ஏதும் இல்லாமல் மாண்டு போகிறார்கள்.
இந்த அவலத்தை சுட்ட வந்த கவிஞர்,
இந்த தேசத்தில் தலைவர்கள் எல்லாம்
கடிகாரங்கள் மாதிரி
இடத்திற்கு தகுந்தாற்போல்
நேரம் காட்டுகிறார்கள்.
தொண்டர்கள்தான் பாவம்
கிழக்கு வெளுத்த உடன்
கிழித்தெறியப்படுகிறார்கள்.
                       (“கனவு குதிரைகள்” கவிதை தொகுப்பில் இருந்து )
என்கிறார்.
இந்த கவிதையில் , ஒவ்வொரு நாட்டிலும் கடிகாரங்கள் காட்டும் நேரம் வேறுபடுவதும் , ஒரு நாள் முடிந்தவுடன் நாள்காட்டி தாள்கள் கிழித்தெறிய படுவதையும்  தான் சொல்ல வந்த செய்தியோடு மிக அழகாகவும், எளிமையாகவும் பொருத்திவிடுகிறார்.
“சிறகே சுமைதான்” என்று தன கவிதைக்கு தலைப்பிடுவதன் மூலம்,ஒரு பெண் பருவம் அடைவதே அவளுக்கு மிக பெரிய அடிமைத்தனத்தை சுமத்துவதற்கான ஆரம்பமாக மாறி விடுவதை மிக துல்லியமாக சொல்லிவிடுகிறார்.
                    ("அவர்கள் வருகிறார்கள்" கவிதை தொகுப்பில் இருந்து )


கவிஞர் கண்ணதாசன் காலமான போது கவிஞர் மு.மேத்தா எழுதிய இரங்கல் கவிதையில்,
வானவர் தேசத்து வண்ணப்படத்திற்கு
பாடல்கள் புனைந்திட எங்கள் பாவலன் சென்றான்.
அது சரி !
எமன் எப்பொழுது இசையமைப்பாளர் ஆனான்?
                     ("காத்திருந்த காற்று" கவிதை தொகுப்பில் இருந்து )

என்று வினா தொடுத்திருப்பார்.
திரைப்பட பாடல் எழுத ஒரு பாடல் ஆசிரியரை அழைப்பவர் இசை அமைப்பாளரே என்ற நடைமுறை உண்மையை வைத்துக்கொண்டு, மேல் உலகம் சென்றும் கூட கண்ணதாசனின் எழுத்துப்பணி தொடர்வதாக கற்பனை செய்யும் மேத்தாவின் கவிதை ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.