Translate

Wednesday, May 23, 2018

ஒரு வாழை மரத்தின் சபதம்



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திருக்கிறது .

இந்த கொடூர துப்பாக்கி சூடு, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உலக தமிழர்களின் நிலையோ,

"என் கண்ணீரின் வெப்பநிலை அதிகரித்தது "

என்ற கவிஞர் நா.காமராசனின்  நெருப்பு வரிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

அநீதியாக கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்களை எண்ணி எண்ணி

கடந்த இரு தினங்களாகவே மிகுந்த துயரத்தில் உழல்கிறேன்.

தமிழ் ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும்,

ஜல்லி கட்டு போராட்டத்திற்கு ஒரு தோழமை சக்தியாக மீனவர்கள் இருந்த ஒரே காரணத்திற்காக

மீனவர்குப்பம் அதிகாரசக்திகளால் கோரமாக சூறையாடப் பட்ட போதும்,

அண்மையிலே ஜெருசலம் நகரிலே 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்

இசுரேலிய ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டபோதும்,

என் மனம் வேதனையால் தீய்கிறது.

ஒரு சூறாவளியாக வேதனையும் கண்ணீரும் என்னை சுழன்றடிக்கும்

போதெல்லாம் நான் தலைசாய்த்து ஆறுதல் பெறும் தாய்மடியாய் இருப்பவை

கவிஞர். மு.மேத்தாவின் கவிதைகளே.


“மானுடம் எங்கெங்கல்லாம் காயம் படுகிறதோ
அங்கெங்கல்லாம் பூக்கும் சகோதர சோகங்களின்
சர்வதேசிய பூக்கள் இவைதான்”
என்று கவிதைகளை கண்ணீர்ப்பூக்களாக
பூக்க செய்த மேத்தாவின் வரிகளை நெஞ்சில் நிறுத்துக்கிறேன்.


தன் தலை முறை நலமுடன் வாழ தன்னையே உயிர்பலி தந்த,
அந்த தியாக சுடர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் இவ்வேளையில் ,

ஒரு வாழை மரத்தின் சபதம் என் காதுகளில் அசரீரியாக ஒலிக்கிறது.
ஆம் ஒரு ஒரு வாழை மரத்தின் சபதம்தான்.
கவிஞர் மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் கவிதைத்தொகுதியில்,
இடம்பெற்ற அந்த கவிதையின் சில வரிகளை பகிர்வதன் மூலம் உங்களோடு சேர்ந்து நானும் புது நம்பிக்கை கொள்கிறேன் .


ஒரு வாழை மரத்தின் சபதம்
நான் மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற் காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்துவிட்டால் … என்
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்! கன்றுடைய
கன்றெதிர்க்கும்!


 










No comments:

Post a Comment