Translate

Thursday, August 30, 2018

கண்ணீர் அணைஎன்


கல்லூரி நாட்களில்


கல்லணை நீரில் மூழ்கி


காலமாகிவிட்ட நண்பனின் முகம்


கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க


வகுப்பறையில் அவன்


கடைசியாக  என்னிடம் பேசிய


பேச்சுக்கள் மட்டும் கல்வெட்டுகளாய் மனதில் .  .  .


 சைபர் வெளியில் மிதக்கும் கவிதைகள்

 
அண்டவெளியினில் அலைபாய்ந்திடும் காற்றினில்
அனைத்து  இடங்களிலும்  தங்கியிருக்கும்
காலம்காலமாய்  . . .
என்றென்றும்  நிரந்தரமாய்  . . .   
அந்த கவிஞனின் பிரகடனமும்
இந்த தலைவனின் சூளுரையும்
அவனுடைய ஏச்சுகளும்
கோபம் கொண்ட உன் தரப்பின் பேச்சுக்களும்
இசைப்பிரியாவின் அழுகுரலும்
சிங்கள காடையர்களின் எக்காள ஒலியும்
தமிழீழ விடுதலை தலைவன்
பிரபாகரனின் முதல் மேடை பேச்சும்
தமிழீழ தியாகச்சுடர் திலீபனின்
கடைசி நேர ஏக்க பெருமூச்சும்
காந்தியின் “ஹே ராம்” என்ற சொல்லும்
கோட்சேயின் தந்திரத்தால்
கொல்லப்பட்ட முஸ்லிம்களின்
மரண ஓலமும்
இங்கேதான்  .  .  . 
இங்கேதான்  .  .  .
அண்டவெளியினில் அலைபாய்ந்திடும் காற்றினில்
அனைத்து  இடங்களிலும் தங்கியிருக்கும்
காலம்காலமாய்  . . .
என்றென்றும்  நிரந்தரமாய்  . . .   


உங்கள்  ஆக்டொபஸ் கரங்களால்
அனைத்து கூக்குரல்களையும்
அடக்கிட துடிக்கும்
ஆதிக்கவெறி நச்சு பாம்புகளே!

 உங்களுக்கு இப்பொழுது
புதிய மற்றும்  
அதிர்ச்சி தரும் செய்தி

அண்டவெளியினில் அலைபாயும்
எங்கள் அழுகுரல்கள் என்பதெல்லாம்  அந்தக்காலம்
உங்கள் தூக்கத்தை தொலைக்கும்
நீங்கள் தடை போட துடிக்கும்

எம் கவிதைவரிகள்
சைபர் வெளியினில் மிதக்கும்
என்றென்றும்  நிரந்தரமாய் என்பதே  இந்தக்காலம்

 
வாய்ப்பூட்டு சட்டம் போடும்
உங்களால்
மனசுக்குள் பொங்கியெழும்
உணர்வலைகளை
தடைபோட இயலுமா ?  

 
காற்றை கட்டுப்படுத்த
கடிவாளம் உண்டோ உம்மிடம்?

 Tuesday, August 28, 2018

பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரேபல ஆண்டுகளுக்கு முன்பு என் குடும்பம் மணப்பாறையில் குடியிருந்தபோது (என் ஆரம்பப்பள்ளி நாட்கள் அவை

1980-1986) நாங்கள் பார்த்த திரைப்படம் நடிகர்திலகம் மற்றும் முன்னணி நடிகர் நடிகையர்கள்  நடித்த "நீதிபதி" என்ற திரைப்படம்.

அந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் ஒரு நேர்மையான நீதிபதியாக நடித்திருப்பார் .


அவர் தன் நேர்மையான அணுகுமுறையால் நீதி துறைக்குள்ளும் ,குடும்பத்திலும் கெட்டவர்களால் எதிர்கொள்ளும் இன்னல்களும் அதில் இருந்து அவர் மீண்டு வருவதே திரைப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

இந்த திரைப்படத்தை நான் எட்டு வயது சிறுவனாக பார்த்ததன் பின்பு சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் "பாசமலரே "

எனத்தொடங்கும் பாடலை பார்க்க நேர்ந்தது.

அதில் வரும்,

அன்பை உரைத்திட வாய் இல்லாத அழகு சிலை இவள்

கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்

போன்ற வரிகளை கேட்டபின்பு,

அடுத்துவரும்

உன்வசத்தில் இந்த ஊமைக்குயில் இவள்

இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்

போன்ற வரிகளை கூட கேட்க பொறுமை இல்லாத எனக்கு

ஒரு எண்ணம் எழுந்தது.

என்னய்யா இது ரொம்ப ஓவரால்லா இருக்கு ?
அந்த பொண்ணுக்கு,
வாயை திறந்து நாலு அன்பான வார்த்தைகளை கூடவா சொல்ல தெரியாது?
எனக்கு பசிக்கிதுன்னு கூட சொல்ல தெரியாமயா   கல்யாண வயசு வரைக்கும்
ஒரு பெண்ணை சிவாஜியும் , கே .ஆர் .விஜயாவும் வளர்த்திருப்பார்கள்?
என்று நினைத்த நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன்.
 பிறிதொரு நாள் முழு திரைப்படத்தையும் பார்த்தபோதுதான்  என் தவறான அனுமானம்  எனக்கு விளங்கியது.
அந்த தம்பதிகளின் செல்ல மகள் ஒரு ஊமை. 
மன்னிக்கவும் அந்த தம்பதிகளின் செல்ல மகள்  ஒரு மாற்று திறனாளி
(அய்யா தமிழ் இன தலைவரே! கலைஞரே!  நன்றி அய்யா
நீங்கள் இறந்தும் இறவாமல் உங்கள் வார்த்தைகளால் என்னை வழி நடத்தியமைக்கு)
பிறகு வேறென்ன செய்தி ?
அந்த தம்பதிகளின் செல்ல மகளாக நடித்தவர் அந்த காலத்து
கீர்த்தி சுரேஷ்.
இந்த காலத்தில் நாம் காணும் திரை த்தாரகையோ இந்த காலத்து மேனகா

எதற்காக இந்த அனுபவ பதிவு என்றால் ஒரு திரைப்படப்பாடலை அந்த திரைப்படத்தில் இருந்து தனியாக வைத்து சிந்தித்தால் பொருள் விளங்காது அல்லது தவறான பொருள் வரும்.
ஒரு திரைப்படப்பாடலுக்கே இந்நிலை எனில் கவிதைக்கு?


அந்த பாடல் …

நன்றி SMULE இணைய தளத்திற்கு
படம் : நீதிபதி
பாடியவர்கள் : TMS,சுஷீலா,ஷைலஜா
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
ஆஆஆ ,ஆஆஆ,ஆஆஆ,ஆ
ஆஆஆஆஆ,ஆஆஆஆஆஆ
ல ல ல, ல ல ல, ல ல ல,ல ல ல ல.
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ (2)
உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம்....இசைக்கும்....கீதமே
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
முத்து மணிச்சரம் மோதிரம், நகைகள் பூட்டவே
முல்லை மலர் சர மல்லிகை,குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள்,வளையல் மாட்டுவே
சின்ன விழிகளின்,ஓரம்எங்கும்,மையை தீட்டவே
கண்மணியே, எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே, பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து, மாலைக் கொள்ளும்
வைபோகமே......தெய்வீகமே
பாச மலரே, அன்பில் விளைந்த, வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
நெற்றிதிலகமும்,தாலியும்,நிலைத்து வாழ்கவே
வெற்றித் திருமகள் வாசலை, நலங்கள் சூழ்கவே
அன்பை உரைத்திட வாயில்லாத,அழகுச்சிலையிவள்
கொண்ட பசியையும் கூறிடாத,குழந்தை போன்றவள்
உன் வசத்தில், இந்த ஊமைக் குயில்,

இவள் இன்பம் துன்பம், இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக,
கண் போலவே,, பொன் போலவே…
பாச மலரே, அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே

Monday, August 27, 2018

இயற்கையின் பேராற்றல்முதலாவது விஷயம் என்னவென்றால், “சபரி மலையில் பெண்கள் நுழைய அனுமதிகேட்டு நீதிமன்றத்தை அணுகியதால் ஐயப்பனுக்கு ஏற்பட்ட சீற்றத்தின் விளைவே இந்த கேரள வெள்ள பேரிடர்” என்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க உளறலின், எதிர் வினையே மனுஷ்ய புத்திரனின் கவிதை.
மனுசியபுத்திரன் அந்த கவிதையில் எந்த ஹிந்து கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை .மழையை பெண்ணாக உருவகித்தே எழுதியுள்ளார்.பெண்மையை இயற்கையின் பேராற்றல் என்று தன் கவிதையில் புனைவதன் மூலம் , அவளை அசுத்தம் என்று இழிவு செய்பவர்களுக்கு சரியான எதிர்வாதம் செய்கிறார். அதேவேளையில் பெண்சமூகத்தை  உயர்வாக சித்தரிப்பதன் மூலம் அவர்களை தன்னம்பிக்கை கொள்ள செய்கிறார்.

மனுஷ்யபுத்திரனின் (அப்துல் ஹமீது ) இயற்பெயரை தோண்டி எடுத்து அவரை முஸ்லீம் என்று முத்திரை குத்துகிறவர்களுக்கு என் கேள்விகள் சில ..
ஒரு முஸ்லீம் எப்படி ஹிந்து சமயத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை
கேள்வி கேட்கலாம்? என்பதே உங்களின் இந்த ருதரத்தாண்டவத்திற்கு
காரணம் . (நாம்  கவிஞர்களை  மதம் சாதி என்று பார்க்கவில்லை.
அப்படி வாதம் செய்பவர்களை மடக்கவே வேறு வழியின்றி இப்படி கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது. )

பாரதியார் பிறப்பால் என்ன மதம் என்று அனைவருக்கும் தெரியும்.  பாரதியார் “தில்லி துருக்கர் செய்த வழக்கமடி முகமலர் மறைத்தல்” என்று எழுதினாரே ? அதை அவரது கருத்து சுதந்திரம் என்றுதானே அன்றும் இன்றும் இஸ்லாமியர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.
கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் ஓரு கவிதையில் அளவற்ற அருளானும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான் என்று எழுதினார் .
சிற்பி பால சுப்பிரமணியன் நேரடியாக முஸ்லிம்களின் கடவுள் பெயரை குறிப்பிட்டர். அல்லா முஸ்லிம்களின் கடவுள். நபிகள் அவரின் தூதர்
ஆனால் மனுஸ்யபுத்திரன் மழையை பெண் உருவமாய் உருவகித்து எழுதியுள்ளார். எந்த ஹிந்து கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை . நாட்டையும் ஆறுகளையும் பெண்களாய் தாயாய் உருவகம் செய்வது கவிதை மரபே. மழையை பார்த்து உன் கோபம் போதும் தாயே என்கிறார்.


எனவே மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியர் என்பதால்தான் ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்தினர் என்பது பொருத்தமற்ற குற்றசாட்டு மட்டுமல்ல தீய உள்நோக்கம் கொண்டதும் கூட.


 இந்த விளக்கங்கள் இப்படி இருக்க கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதை குறித்தும் சிந்தித்து பார்ப்போம் .
ஏன் கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் அப்படி எழுதினார்? எந்த சூழலில் அப்படி எழுதினார்? பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஓரு பெண் ராணுவ வீரர்களால் வல்லுறவு செய்யப்பட்ட போது அதை காண சகியாத அல்லா தலை குனிந்து கொண்டதாக குறிப்பிட்டார். அந்த கதை கவிதையை முழுமையாக படித்தவர்களுக்கே அது புரியும். அதில் அல்லாஹ்வை அவர் இகழவில்லை. 
வெறும் குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொண்டு அவரை தவறாக கருதுவது எப்படி தவறோ அப்படித்தான் மனுஸ்யபுத்திரனையும் குற்றம் சுமத்துவது. 
பிறப்பால் முஸ்லிம்களான காலம் சென்ற கவிஞர்கள் இன்குலாப் மற்றும் ரசூல் இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைதனத்தை  தங்களின் கவிதைகளில் சாடி உள்ளார்களே? அதன் காரணமாக கடும் தொல்லைக்கு ஆளானார்களே?

தஸ்லிமா நஸ்ரின் குறித்த இன்குலாப் கவிதை ஒன்றில்


"நூலாம் படைகளை துடைப்பம் துடைத்து விடும்
சமவெளி காற்றில் பூக்கள் சிரித்திடும் "  
 என்றும்

"இன்னமும் எங்கே அலைகிறாய் ?
தீட்டிய ஆயுதமும் தினவெடுத்த ஆணாதிக்கமுமாய்..."
என்றும் கூக்குரல் இட்டாரே ?


ரசூல் தன் கவிதையில்,
ஒருவர்கூட பெண் நபி இல்லையே ?
என்று கேள்வி எழுப்பியதற்காக தன் கிராமத்தில் (தக்கலை )
இருந்து ஊர் விலக்கம் செய்யப்பட்டு கடும் இன்னல் அனுபவித்தாரே ?


சாலமோன் பாப்பையா "மாஸ்வாதி கல்லறை" குறித்து தன் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளாரே?

கவிஞர் மு.மேத்தா பிறப்பால் ஒரு இஸ்லாமியர்தான்.
“பர்தாவுக்குள் பர்தாவை மறைக்கும் பரக்கத்துக்கள்” என்று பெண்களின் வேதனையை உணர்வு பொங்க தன் கவிதையில் பதிவு செய்து உள்ளாரே?

பிறப்பால் முஸ்லிம்களான கவிஞர்கள் இன்குலாப் , மு .மேத்தா  மற்றும் ரசூல் ஆகியோர் தாங்கள் ஏற்றுக்கொண்ட இலக்கிய பணிக்கு மிக மிக நேர்மையாக தங்கள் மதத்தையே சுய ஆய்வு செய்து தத்தமது கவிதைகளை படைத்துளார்கள்.

மனுஷ்யபுத்திரனும் தன் சமயத்தை சுய ஆய்வு செய்து கவிதைகளை படைத்துளார்கள்.
கவிஞர்கள் எல்லோரும் நாடோடி பறவைகள்.
அவர்கள் நாடு , மதம் என்ற எல்லைகளுக்குள் சிக்காமல் சிறகடிப்பவர்கள்.
அவர்களுக்கு மனிதர்கள் முக்கியம். மனித உரிமைகள் முக்கியம்.
"நீ மனுசி நமது மானுடம்" என்று கவிஞர் இன்குலாப் பெண்கள் குறித்து முழங்கியது அதனாலதான். 


      
 

Friday, August 24, 2018

புதையல்


நான் 1980 மற்றும் 1986 க்கு இடைப்பட்ட வருடங்களில் மணப்பாறையில் உள்ள புனித மரி அன்னை துவக்க பள்ளியில் படித்து கொண்டிருந்த காலமது.


பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக ஆசிரியை ஒருவர் திரைப்பாடல் மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு.

ஓன்று இந்திய சுதந்திர போராட்டத்தை குறிப்பது.

மற்றொன்று இயேசு நாதரை வணங்கி பாடும் பக்தி பாடல்.

அந்த நோட்டை பல வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன்.

தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 

அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்
உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிஞர் மனுஸ்ய புத்திரனை ஒரு இஸ்லாமியர் என்று முத்திரை குத்தி அவரது கவிதை பணியை கொச்சை படுத்தும் இத்தருணத்தில்,
இந்த பாடல்களை எழுதிய ஆசிரியையின் பெயர் நூர்ஜஹான் என்ற தகவலை தெரிவிப்பதன் மூலம் இஸ்லாமியர்கள், சமூகத்தின் அனைத்து வகுப்பினரிடமும் நல்லிணக்கத்தை பேணவே விரும்புகின்றனர் என்ற செய்தியை இந்த சமூகத்திற்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
மேலும் இஸ்லாமிய சமூகத்தின் தேச பக்தி மறக்க பட்டதல்ல . அது திட்டமிட்டே மறைக்க பட்டது என்பதும் உறுதி.
அந்த பாடல்கள்  ...

(அடி என்னடி ராக்கம்மா  (பட்டிக்காடா பட்டணமா) திரைப்பாடல் மெட்டு)
சொல்லடா தம்பி நம் பண்பாட்டு பெருமை
இந்நாளில் மயங்கியது
நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்
நம் தேசம் கலங்கியது
வந்தானே வெள்ளையன் கையேந்தி அந்த வரவுக்கு
இடம்தந்தது.


(வாழும் வரை போராடு (பாடும் வானம்பாடி) திரைப்பாடல் மெட்டு)

அன்பின் இறைவா போற்றி வாழ்த்தி வணங்கிடுவோமே

Thursday, August 23, 2018

கண்ணீர் திரையிட்ட கண்கள்


சின்ன செடியும் அது சிந்தும் 

புன்னகையும் இப்போது அங்கில்லை

கண்ணீர் திரையிட்ட கண்களும்

வெள்ளத்தில்  மிதக்கும் வாழ்க்கையும்

மட்டுமே இப்போது அங்குண்டு

ஒரு கோடி மழைத்துளி ஊசி கொண்டு
குத்தி குத்தியே குதறப்பட்டிருக்கிறது
என்னருமை சகோதர கேரளம்

கவிழ்க்க பட்ட நீர்குவளை
உருவாக்கிய  நவீன ஓவியமாய்
உடைந்து சிதறிய இராட்சத மாளிகையின்  துண்டுகளாய்
இப்போது அந்த மாநிலம்

கடவுளின் தேசத்தை
இயற்கை பூதம் வேட்டையாடிவிட்டது

எல்லாம் பெருமழை நீரில்
மூழ்கியபின்பு
அதில் தத்தளித்து கொண்டிருக்கிறது
அம்மக்களின் நிகழ்காலமும்
ஓராயிரம் கேள்விக்குறிகளை ஏந்தியபடி எதிர்காலமும்அவசர மையங்களை நோக்கியே
அலைபாயும்
கண்ணீர்  அழைப்புகள்
திரும்பிய பக்கமெல்லாம்
காற்றில் திட்டுத்திட்டாய்
அழுகுரல்கள்
வெள்ளம் சூழ்ந்த மருத்துவமனைகளின்
உள்ளே இன்றோ நாளையோ
பிறக்க போகும் உயிர்கள்

வெள்ளம் சூழ்ந்த வீடுகளின் உள்ளே
இறந்த உடல்களுக்கு அருகில்
காவல் காக்கும் சில துர்ப்பாக்கிய மனிதர்கள்

கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள்
என அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
மக்கள் தஞ்சம் அடைந்து தவித்து அழும்
இப்பொல்லாத வேளையில்
கண்ணை மூடிக்கொண்டு கடவுளர்கள்
வெளியேறிவிட்டனர்
மதவெறிகொடுக்குகள் மட்டும்
இணையத்தின் இண்டு இடுக்குகளிலும் புகுந்து
விஷம் கக்க தொடங்கியுள்ளன

பாடைகளையும்
அரசியல்  மேடைகளாக்கிவிடும்
இந்த எத்தர்களை காண நடுங்கி
கண்ணை மூடிக் கொண்ட சூரியனும்
மேகங்களுக்குள் பதுங்கி கொண்டதால்
இப்பொழுதும் அங்கே தொடர்கிறது
மழையின் நர்த்தனமும்  
இருட்டின் கும்மாளமும்


அங்கே
பெரியாறும் சாலக் குடியாறும்
ஆக்ரோஷமாகப் பாயும் போது
இங்கே
கரைபுரண்டோடும் காவேரி பெண்ணாள்
கடைமடை பகுதிகளுக்கு
கண் ஜாடை காட்ட மறுக்கிறாள்

அரவணைத்து முத்தமிடும்
அன்னையாய் இருந்த
இயற்கை
கையில் பிரம்பை தூக்கிக்கொண்ட
ஆசிரியராய் புது அவதாரம் எடுத்தபின்
இனி நாம்
என்ன பாடம் கற்கப்போகிறோம்?

என்ன செய்யப்போகிறோம்?