Translate

Friday, August 17, 2018

எங்களை சுமந்தவள்


உன்னுடைய வயதை

இணைய தளங்களில் பார்த்தவுடன்

வியப்பின் எல்லையில்

தூக்கி எறியப்பட்டேன்.


ஆங்கிலேயர்கள் காலத்திலேயே
உன் பிறப்பு நிகழ்ந்துவிட்டது
என்றாலும்   
என் இளமை காலங்களின்
இனிய நினைவுகளை
தாங்கி நிற்பதனால்
நீ
தள்ளாடும்
இவ் வேளையிலும்
இளைய ராணியாகவே
என் இதயத்தால்
உன்னை காண்கிறேன்.

இன்று போலவே 1979 இல்
வெள்ளம் கரைபுரண்டு ஓட


இடுப்பில் ஒரு குழந்தையையும்
கையில் இன்னொரு குழந்தையுமாக
இளம்தாய் ஒருத்தி நடந்து வந்த போது
உன் மேனியையே நடைப்பாதை
ஆக்கி தந்தவள் நீ!

அன்று அந்த தாயின் இடுப்பில்
அமர்த்திருந்த இளையவன்தான்
உன்னோடு பேசுகிறேன்
சுழன்றடித்த சூறாவளி
ஓயாமல் பெய்த அடைமழை
தாகத்தால் தளிர் கொடிகள்
தவித்து அழும் கடுங்கோடை


எத்தனை எத்தனை கண்டிருப்பாய்
உன் வாழ்நாளில்?

கரகரத்த குரலுக்கு சொந்தக்காரன்
கருப்பு சிவப்பு கட்சித்தலைவன்
பிறந்த ஆண்டுதான் நீயும்
பிறப்பெடுத்ததால்
அந்த தலைவன் உன் தோழனா?
நீ அவனுக்கு தோழியா?

பத்து வயதில் பெரியாரின் தொண்டனாய்
முதல் ஊர்வலத்தில் உயர்த்தி பிடித்த
சமூகநீதி கொடி
ஒரு நூற்றாண்டை உள்வாங்கி
படபடத்து பறக்கிறது
இறுதி ஊர்வலத்திலும்

தமிழ் மண் முழுவதும்
சுற்றி சுழன்ற நீள் பயணம் தலைவனுடையது

நின்ற நிலையிலேயே
நின்று கொண்டு தமிழகவரலாற்றின்
சாட்சியாய் நிலைத்த நெடும் பயணம் உன்னுடையது

நீங்கள் 

இருவருமே கடைசிவரை

உழைப்பையே உற்ற தோழனாக்கி

கொண்டவர்கள்.




தலைவனுக்கு விடைகொடுத்த
தவித்த பொழுதுகளின்
 ஈரம் காய்வதற்குள்
உனக்கொரு விடைகொடுக்க
காலம் எனும் காலன் இட்ட
கட்டளையால் பேசுகிறேன்
இதயத்தின் விருப்பம் இதில்
எள்முனையும் இல்லை.


போய் வா தாயே!











No comments:

Post a Comment