Translate

Monday, August 27, 2018

இயற்கையின் பேராற்றல்



முதலாவது விஷயம் என்னவென்றால், “சபரி மலையில் பெண்கள் நுழைய அனுமதிகேட்டு நீதிமன்றத்தை அணுகியதால் ஐயப்பனுக்கு ஏற்பட்ட சீற்றத்தின் விளைவே இந்த கேரள வெள்ள பேரிடர்” என்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க உளறலின், எதிர் வினையே மனுஷ்ய புத்திரனின் கவிதை.
மனுசியபுத்திரன் அந்த கவிதையில் எந்த ஹிந்து கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை .மழையை பெண்ணாக உருவகித்தே எழுதியுள்ளார்.



பெண்மையை இயற்கையின் பேராற்றல் என்று தன் கவிதையில் புனைவதன் மூலம் , அவளை அசுத்தம் என்று இழிவு செய்பவர்களுக்கு சரியான எதிர்வாதம் செய்கிறார். அதேவேளையில் பெண்சமூகத்தை  உயர்வாக சித்தரிப்பதன் மூலம் அவர்களை தன்னம்பிக்கை கொள்ள செய்கிறார்.

மனுஷ்யபுத்திரனின் (அப்துல் ஹமீது ) இயற்பெயரை தோண்டி எடுத்து அவரை முஸ்லீம் என்று முத்திரை குத்துகிறவர்களுக்கு என் கேள்விகள் சில ..
ஒரு முஸ்லீம் எப்படி ஹிந்து சமயத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை
கேள்வி கேட்கலாம்? என்பதே உங்களின் இந்த ருதரத்தாண்டவத்திற்கு
காரணம் . (நாம்  கவிஞர்களை  மதம் சாதி என்று பார்க்கவில்லை.
அப்படி வாதம் செய்பவர்களை மடக்கவே வேறு வழியின்றி இப்படி கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது. )

பாரதியார் பிறப்பால் என்ன மதம் என்று அனைவருக்கும் தெரியும்.  



பாரதியார் “தில்லி துருக்கர் செய்த வழக்கமடி முகமலர் மறைத்தல்” என்று எழுதினாரே ? அதை அவரது கருத்து சுதந்திரம் என்றுதானே அன்றும் இன்றும் இஸ்லாமியர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.
கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் ஓரு கவிதையில் அளவற்ற அருளானும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான் என்று எழுதினார் .
சிற்பி பால சுப்பிரமணியன் நேரடியாக முஸ்லிம்களின் கடவுள் பெயரை குறிப்பிட்டர். அல்லா முஸ்லிம்களின் கடவுள். நபிகள் அவரின் தூதர்
ஆனால் மனுஸ்யபுத்திரன் மழையை பெண் உருவமாய் உருவகித்து எழுதியுள்ளார். எந்த ஹிந்து கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை . நாட்டையும் ஆறுகளையும் பெண்களாய் தாயாய் உருவகம் செய்வது கவிதை மரபே. மழையை பார்த்து உன் கோபம் போதும் தாயே என்கிறார்.


எனவே மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியர் என்பதால்தான் ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்தினர் என்பது பொருத்தமற்ற குற்றசாட்டு மட்டுமல்ல தீய உள்நோக்கம் கொண்டதும் கூட.


 இந்த விளக்கங்கள் இப்படி இருக்க கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதை குறித்தும் சிந்தித்து பார்ப்போம் .
ஏன் கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் அப்படி எழுதினார்? எந்த சூழலில் அப்படி எழுதினார்? பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஓரு பெண் ராணுவ வீரர்களால் வல்லுறவு செய்யப்பட்ட போது அதை காண சகியாத அல்லா தலை குனிந்து கொண்டதாக குறிப்பிட்டார். அந்த கதை கவிதையை முழுமையாக படித்தவர்களுக்கே அது புரியும். அதில் அல்லாஹ்வை அவர் இகழவில்லை. 
வெறும் குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொண்டு அவரை தவறாக கருதுவது எப்படி தவறோ அப்படித்தான் மனுஸ்யபுத்திரனையும் குற்றம் சுமத்துவது. 
பிறப்பால் முஸ்லிம்களான காலம் சென்ற கவிஞர்கள் இன்குலாப் மற்றும் ரசூல் இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைதனத்தை  தங்களின் கவிதைகளில் சாடி உள்ளார்களே? அதன் காரணமாக கடும் தொல்லைக்கு ஆளானார்களே?

தஸ்லிமா நஸ்ரின் குறித்த இன்குலாப் கவிதை ஒன்றில்


"நூலாம் படைகளை துடைப்பம் துடைத்து விடும்
சமவெளி காற்றில் பூக்கள் சிரித்திடும் "  
 என்றும்

"இன்னமும் எங்கே அலைகிறாய் ?
தீட்டிய ஆயுதமும் தினவெடுத்த ஆணாதிக்கமுமாய்..."
என்றும் கூக்குரல் இட்டாரே ?


ரசூல் தன் கவிதையில்,
ஒருவர்கூட பெண் நபி இல்லையே ?
என்று கேள்வி எழுப்பியதற்காக தன் கிராமத்தில் (தக்கலை )
இருந்து ஊர் விலக்கம் செய்யப்பட்டு கடும் இன்னல் அனுபவித்தாரே ?


சாலமோன் பாப்பையா "மாஸ்வாதி கல்லறை" குறித்து தன் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளாரே?

கவிஞர் மு.மேத்தா பிறப்பால் ஒரு இஸ்லாமியர்தான்.
“பர்தாவுக்குள் பர்தாவை மறைக்கும் பரக்கத்துக்கள்” என்று பெண்களின் வேதனையை உணர்வு பொங்க தன் கவிதையில் பதிவு செய்து உள்ளாரே?

பிறப்பால் முஸ்லிம்களான கவிஞர்கள் இன்குலாப் , மு .மேத்தா  மற்றும் ரசூல் ஆகியோர் தாங்கள் ஏற்றுக்கொண்ட இலக்கிய பணிக்கு மிக மிக நேர்மையாக தங்கள் மதத்தையே சுய ஆய்வு செய்து தத்தமது கவிதைகளை படைத்துளார்கள்.

மனுஷ்யபுத்திரனும் தன் சமயத்தை சுய ஆய்வு செய்து கவிதைகளை படைத்துளார்கள்.
கவிஞர்கள் எல்லோரும் நாடோடி பறவைகள்.
அவர்கள் நாடு , மதம் என்ற எல்லைகளுக்குள் சிக்காமல் சிறகடிப்பவர்கள்.
அவர்களுக்கு மனிதர்கள் முக்கியம். மனித உரிமைகள் முக்கியம்.
"நீ மனுசி நமது மானுடம்" என்று கவிஞர் இன்குலாப் பெண்கள் குறித்து முழங்கியது அதனாலதான்.



 


 



     
 













No comments:

Post a Comment