Translate

Tuesday, May 15, 2018

கவிஞர் வாலிக்கு நேர்ந்த அநீதிகள்


கவிஞர் வாலி


தமிழ் திரைப்படப்பாடல் உலகில் கவிஞர் கண்ணதாசனுக்கு தனிப்பெரும் இடம் உண்டு. இதை யாராலும் மறுக்க இயலாது. மனப்பூர்வமாக ஏற்று கொள்கிறோம்.
அதே வேளையில் , மிக பெரும் சாதனை புரிந்தவர்கள் அவருடைய சம காலத்திலும் , அதற்கு முன்பாகவும் பின்பாகவும் பலர் இருந்தார்கள் இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
அவ்வாறு அவர் காலத்திலும் அதன் பின்பும் தமிழ் திரைப்பாடல் உலகில் வெற்றி பல பெற்று வெற்றிக்கொடி நாட்டியவர்தான் கவிஞர் வாலி.
கவிஞர் வாலி அவரது ரச குறைவான பாடல்களுக்காக விமர்சிக்க பட்ட அளவுக்கு அருமையான கருத்தாழமிக்க, கவித்துவம் நிறைந்த பாடல்களுக்காக பாராட்டப்பட்டதில்லை.
காரணம் என்னவென்றால், அவர் எழுதிய அருமையான பாடல்கள் பலவற்றை கண்ணதாசன் எழுதியதாக பலர் தவறாக கருத்திக்கொண்டதேயாகும்.


தமிழ் அறிஞர் திருமிகு.அவ்வை நடராஜன்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒரு இலக்கிய நிகழ்வு. இதில் கவிஞர் வாலியின் நெடுநாள் நண்பரும் தமிழ் அறிஞருமான அவ்வை நடராஜன் பேசுகையில், கண்ணதாசனின் கவி மேதமையை வானளாவ புகழ்ந்து பேசி கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் ,
காற்று வாங்கப்போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி  என்னவானாள் ?
என்ற பாடலை குறிப்பிட்டு பேசிய அவ்வை நடராஜன்-
என்ன ஒரு கவிதை அழகு மிளிரும் பாடல் பாருங்கள்
இதை போல் எழுத இன்று எவரேனும் உண்டா ?
என்று கேள்வி எழுப்பினார் .

மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பியது.
இதில் கொடுமை என்னவென்றால்,
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலிதான். கண்ணதாசன் அல்ல.
இத்தனைக்கும் மேடையில் வாலியும் அமர்ந்து இருந்தார்.நடிகை திருமிகு.மனோரமா

நடிகை மனோரமா பத்திரிகை நேர்காணல் ஒன்றில்,
கண்போன போக்கிலே கால் போகலாமா ?
கால் போன போக்கிலே மனம் போகலாமா ?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா ?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?
என்ற பாடலை குறிப்பிட்டு,
எம் .ஜி .ஆர் படத்துல அந்த காலத்துல கண்ணதாசன்
என்னமா கருத்து இருக்கிற மாதிரி பாட்டுஎழுதி இருக்கிறாரு!
அப்படி ஒரு கவிஞர் இப்பொழுது உண்டா ? என்று ஆதங்க பட்டிருந்தார்.
அவருடைய ஆதங்கத்திற்கு யாதொரு தேவையும் இல்லை.
ஏறக்குறைய அபிராமி அந்தாதி பாணியில் அமைந்த இந்த பாடலை
எழுதியவர் கவிஞர் வாலிதான் என்பதை நான் சொல்ல தேவை இல்லை.
இவ்வளவு நேரம் இந்த கட்டுரையை படிப்பவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர் திரு.ஜீ.வெங்கடேஸ்வரன்

ஜீ .வீ  என்று அழைக்கப்படும் காலம் சென்ற ஜீ.வெங்கடேஸ்வரன்
ஒரு பத்திரிகை நேர்காணலில்,
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!
("நிலவு ஒரு பெண்ணாகி " எனத்தொடங்கும் உலகம் சுற்றும் வாலிபன்
பட பாடல்) என்ற வரிகளை குறிப்பிட்டு கற்பனை அபாரம்
என்று வியந்திருந்தார்.
கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே என்று வேறு மதிப்புரை
வழங்கியிருந்தார். ஜீ .வீ  வியந்த அபாரமான 
கற்பனைக்கு சொந்தக்காரர் கண்ணதாசன் அல்ல. வாலிதான்.

ஜனங்களின் கலைஞன் திருமிகு.விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக்கும், கவிஞர் வாலியும்
ஒன்றாக கலந்து கொண்ட திரைப்பாடல் வெளியிடும் நிகழ்வொன்றில்,
ஜெமினி கணேசன் நடித்த திரைபடமொன்றில் இடம் பெற்ற பாடலான,
உனக்கென்ன குறைச்சல் (குறை) நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை!
வந்தால் வரட்டும் முதுமை!
எனத்தொடங்கும் பாடலை பாராட்டி பேசிக்கொண்டிருந்தார்.
கவிஞர் கண்ணதாசன்  ஒரு முதியவருடைய மன குமுறலை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பதாகவும், கவிஞரின் இதைப்போன்ற எண்ணற்ற பாடல்களுக்கு தான் அதிதீவிர விசிறி என்றும் மேடையில் விவேக் பேசிக்கொண்டிருக்கையில்,
தற்செயலாக கவிஞர் வாலியை கவனித்த போது,
இவரை அவர் ஏதோ உற்று பார்ப்பதை போலவும் , கோபமாக இருப்பதை போலவும் தோன்றியிருக்கிறது.
இது தன் மன பிரமையாக இருக்கலாம் என்று தனக்கு தானே சமாதானம்
சொல்லிக்கொண்ட விவேக் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
அடுத்த நாள் காலை வேளையில்,
வாலியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
என்னையா ? விவேக் இப்படி பேசீட்ட!
அந்த பாட்ட நான்தான்யா எழுதினேன். கண்ணதாசனை பாராட்டு வேணாமுன்னு சொல்லலை.
அவரைபாராட்ட, அவர் எழுதிய எத்தனையோ பாட்டு இருக்குதேயா.
இதை மேடையிலேயே நீ பேசும் போது ,நான் சொல்லி இருந்தா உனக்கும் தர்மசங்கடம் அதுமட்டுமில்லாம என்னையும் மக்கள் தப்பா நினைப்பாங்க.
நடந்ததை விடு  இனிமே பார்த்து பேசுய்யா
என்று வாலி சொல்லியிருக்கிறார்.

இது விவேக் வாழ்க்கை அனுபவத்தில் நடந்த ஒரு சிறுகதை .
கவிஞர் வாலிக்கோ சோகமான தொடர்கதையின் ஒரு அத்தியாயம்.


 
திருமிகு.சீமான்

தமிழ் தேசீய அரசியலை ஆற்றலோடு முன்னெடுத்து செல்லும் அன்பிற்குரிய அண்ணண் திருமிகு.சீமான் அவர்கள் தமிழ் தேசீய அரசியலின் அடித்தளமான சூழியல் (Ecology) குறித்து மேடைகளில் முழங்குவதையும், இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாரின் கருத்துக்களை கடைக்கோடி மனிதனுக்கும் பரப்புவதும் தமிழர்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
இதில் என்போன்றோர் மிகுந்த மகிழ்ச்சியே அடைகிறோம்.
இவ்வாறு ஒரு நாள் திரு சீமான் அவர்கள் பேசும்போது,
என் அருமைக்கு உரிய தமிழ் உறவுகளே ,
மழையை பற்றி நம் தமிழ் கவிஞன் .கண்ணதாசன் என்ன குறிப்பிடுகிறான் ?
"மண்ணில் என்ன தோன்ற கூடும் மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ தாய் இல்லாமல் ஏது ?"
என்றுதானே குறிப்பிடுகிறான்
சிந்திக்கணும் ! மழை இல்லைன்னா மனுச இனத்திற்கு வாழ்க்கை இல்லை
என்று பேசினார்.

 
எத்தனையோ பாடல்களில் தாய்மையின் தனி சிறப்பை எழுதியவர்தான் கவிஞர் கண்ணதாசன்.
உலகம் பிறந்தது எனக்காக! ஓடும் நதிகளும் எனக்காக!
எனத்தொடங்கும் பாடலில் ,
 
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருந்த
அன்னை மனமே என் கோவில் அவளே என்றும் என் தெய்வம்
என்ற வரிகளை நான் கேட்ட பொழுதுகளை காட்டிலும் அதன் பிரும்மாண்ட பொருளை
நினைத்து வியந்த பொழுதுகளே அதிகம்.
அப்படி எத்தனையோ கண்ணதாசன் பாடல்கள் இருக்க வாலியின் நியாமான சாதனைகளை ஏன்
மறைக்க வேண்டும் ?
கவனகுறைவாகத்தான் என்பீர்கள் .நானும் அதை மறுக்கவில்லை.
கவனக்குறைவாகவே ஏன் அப்படி நிகழவேண்டும் ?
என்பதே என் கேள்வி ?
கண்ணதாசன் அளவிற்கு இன்று திரைத்துறையில் ஆற்றல் மிக்க கவிஞர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு தங்களின் பதில் என்ன என்று கவிஞர் மு.மேத்தா விடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,


இந்த விமர்சனத்தை என்னால் ஏற்க முடியாது.
கவிஞர் கண்ணதாசன் இருந்த காலத்திலேயே,
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ ?
வெள்ளி  நிலவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
போன்ற கவித்துவமான கருத்தாழமிக்க எத்தனையோ பாடல்களை
எழுதியவர்தான் அண்ணன் வாலி அவர்கள் என்றார் மு.மேத்தா
 


 No comments:

Post a Comment