ஒரு பக்கம் ,
“ஓ! ஒரு தென்றல் புயல் ஆகி வருதே
ஓ! ஒரு தெய்வம் படித்தாண்டி வருதே
கால தேவனின் தர்ம எல்லைகள்
மாறுகின்றதே”
என்றும்,
“எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்
முகமும் அற்று முகவரி அற்று
முடிந்து போயின ஆயிரம் கணங்கள்”
என்றும்,
தன் பாடலில் பெண்ணுரிமை முழக்கம் செய்யவேண்டியது.
மறுபுறம்
“விடியும் வரை பெண் அழகு”
“ஏழு மணிக்கு மேல நீ இன்பலட்சுமி”
“எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி”
“ஜாஹிர் உசேன் தபேலா இவள்தானா ?
“பால்போன்ற தேகம்தான்டி உனக்கு
அதில் பாலாடை கொஞ்சம் விலக்கு”
“லஞ்ச்க்கு ஒரு மஞ்சுளாவும்
டின்னர்க்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்”
என்றெல்லாம் எழுதி பெண்மையை இழிவு செய்வது.
பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துவது.
இவற்றை தட்டிக்கேட்டால் ,
“இந்த சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பது கவிதை
சமூகம் எப்படி இருக்கிறது என்பது திரைப்படப்பாடல் “
என்று கோணல் விளக்கம் தருவது .
இப்படியாக கடந்த காலங்களில்,
அரைகுறையாக கிழிந்த வைரமுத்துவின் முகத்திரை இன்று #MEE TOO ஆல்
முற்று முழுதாக கிழிந்து தொங்குகிறது.
“நல்ல மனிதனாக வாழமுடியாதவன் நல்ல கவிஞனாக இருக்க முடியாதுஅப்படி இல்லாவிட்டால்
அவன் கவிதை பொய்யாக இருக்கவேண்டும் அல்லது அவன் பொய்யாக இருக்கவேண்டும்.”
என்று ஒரு நேர்காணலில் கவிஞர்களை பற்றிய தன் மதிப்பீட்டை குறிப்பிட்டு
இருந்தார் கவிஞர் மு.மேத்தா.
வைரமுத்துவுக்கு இந்த விளக்கம் எவ்வளவு பொருத்தம் என்று எண்ணி பார்க்கின்றேன்.
ஒரு முறை இசைஞானி இளைய ராஜா,
கவிஞர் நா.காமராசனிடம்
“ஒட்டிக்கோ மச்சான்
நீ என்னை கட்டிக்கோ மச்சான்”
நீ என்னை கட்டிக்கோ மச்சான்”
என்று பல்லவியை சொல்லி பாடலை தொடருங்கள் என்று கூறியபோது,
“உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது” என்று இலக்கியம் படைத்தவன் நான்.
பெண்மையை இழிவு செய்யும் வகையில் இப்படிப்பட்ட வரிகளை என்னால் எழுத
முடியாது .
நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்
என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டதாக தன் கட்டுரை தொடரில் (இவர்கள் என் சமகாலத்தோழர்கள்)
பதிவு செய்கிறார் கவிஞர் நா .காமராசன்.
இத்தனைக்கும் வைரமுத்துவுக்கு முன்பாகவே திரை உலகில் பாடல் எழுத தொடங்கியவர்
கவிஞர் நா .காமராசன்.
சுமார் முப்பது என்ற எண்ணிக்கை அளவிலே திரைப்பாடல்களை எழுதி உள்ளார்
.
இதுவே இவர் ஒரு கொள்கை பிடிப்பானவர் என்பதற்கான சான்று.
ஆனால் வைரமுத்துவோ பல ஆயிரகணக்கான பாடல் எழுதி கோடிகளில் புரண்டாலும்
ரச குறைவான பாடல் எழுத மறுப்பு சொல்வதில்லை .
MEE TOO விவகாரத்தில் சின்மயி மட்டுமே குற்றம் சாட்டவில்லை
வேறு பலபெண்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
சின்மயின் குற்றச்சாட்டுக்கு பின்புலமாக அரசியல் உள்ளது என்று மழுப்பும்
சிலர்,
திரு மிகு புவனா மற்றும் பலரின் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?
எத்தனை பெண்கள் அவருடைய பாலியல் துன்புறுத்தலால் எங்கள் பாடகி கனவு
பலியானது என்று குமுறுகிறார்கள்?
அத்தனை பேரும் அவதூறு செய்கிறார்களா ?
அத்தனை பெண்களும் பொய்யர்கள் வைரமுத்து மட்டும் அரிச்சந்திரனின் அண்டை
வீட்டுக்காரர் என்ற முடிவுக்கு இந்த சமூகம் வரப்போகிறதா?
காலம் பதில் சொல்லும் என்று நழுவப்பார்க்கும் வைரமுத்து,
ஒரு நேரம் என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை , உள் நோக்கம்
கொண்டவை என்று கூறும் வைரமுத்து,
நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்
என்று முரண்படுவது ஏன் ?
நான் நல்லவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும்
?
நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்
என்றால் இவர் தவறு செய்திருக்கிறார் என்ற சந்தேகம் நம் போன்றோருக்கு
எழுவது இயல்பானதுதானே ?
இந்த நிலையில் பாரதிராஜா, MEE TOO சம்பந்தமான கேள்விக்கு கடும் சினம்
கொள்கிறார்.
ஏற்கனவே நடிகை ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில், அந்த பெண்ணின் ஒப்புதலோடுதான்
நடந்தது என்று நியாய படுத்தியவர்தான் பாரதிராஜா என்பது இங்கே நினைவுகூறப்படவேண்டியது.
ஒரு ஆண் மகன் தன் காம இச்சைக்கு ஒரு பெண்ணை அழைப்பது மிக பெரிய தவறு
இல்லையா ?
திரைப்பட வாய்ப்புகளை பொறி ஆக்கி அவளுடைய பெண்மையை நுகர துடிப்பது படுபாதக
செயல் இல்லையா?
அந்த ஆண்களின் ஆணாதிக்க தடித்தனத்தை, "புதுமை பெண் " என்ற
பெண்ணுரிமை காவியத்தை படைத்த பாரதிராஜா கண்டிக்காதது ஏன்?
"புதுமை பெண் " திரைப்படத்தில் சிறையில் இருக்கும் தன் கணவனை
மீட்கும் போராட்டத்தில் தன்
பெண்மையை விலை பேச துடிக்கும் கயவர்களிடம் அந்த நாயகி போராடுவாளே ?
இதையெல்லாம் காட்சி படுத்தி விருதுகள் வாங்கி குவித்த பாரதிராஜா ஸ்ரீ
ரெட்டி ஒப்பு கொண்டுதான் சோரம் போனார் என்று முரண்படுவதேன்?
என்றுதான் மகாகவி பாரதி கண்ட சம தர்ம சமுதாயம் அமையும் ?
விடை அளிக்குமா இந்த சமூகம்
என்பதே உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் கேள்வியாய் , நெருப்பாய் பூத்து
எழுகிறது
No comments:
Post a Comment