நான் இந்த பூமிக்கு
புதிதாய் வந்தேன்
என்னை நான் மனிதனாய்
உணர தொடங்கிய நொடிபொழுதுகளில்
அவர்கள்
நீ ஒரு முஸ்லீம் என்றனர்.
என் கால்கள் இரண்டும்
சூம்பிப்போன பின்பு
சபிக்க பட்ட அந்த நாட்களில்
இருளான பள்ள தாக்குகளில்
நான் இடறி வீழ் ந்தேன்.
அன்பான பெற்றோரும் அண்டை அயலாரும்
அந்த பள்ளத்தாக்கில் இருந்து
நான் மீண்டு வர
புத்தகங்களையே கயிறை போல்
வீச தொடங்கினர்
தனிமை இருளின் கதகதப்பில்
புகையும் ஒரு கனவாய்
இலக்கியம் எனக்குள் ஒரு
உலகை கட்டி அமைத்த வண்ணம் இருந்தது.
இரண்டு பெருநகரங்களை
இணைக்கும் அந்த சாலையிடம்
கோபித்துக்கொண்டு ஒரு ஓரமாய்
உட்கார்ந்துகொண்டிருந்த என்னுடைய
கிராமமே என் உலக எல்லையானது.
மெல்ல மெல்ல
எனக்குள் இருந்து வெளிப்பட்ட
பிள்ளை பிறைநிலவு
கவிதைகளெல்லாம் வயதுக்கு வந்த
ஒரு நன்னாளில்
“பூப்புநீராட்டு விழா” நடத்தி மகிழ்ந்தேன்
ஆம்
தலைநகரத்தில் இயங்கும் ஒரு
பதிப்பகம் என் கவிதைகளை
தழுவிக்கொண்டது.
புத்தகமாய் என் கவிதைகளை
நான் பார்த்து பூரித்தபோது
என் வயது பதினாறு
இவன் ஒரு கவிஞன் என்றனர் சிலர்
ஏற்க மறுத்தனர் வேறு சிலர்
சிறகுகள் முளைத்த பறவைக்கு
வானமே புது கூடானது
இதற்கிடையே
என் சித்தப்பாவின் மகளுக்கும்
கவிதைவானில் சிறகடிக்கும் ஆசை
இதயத்தின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது
என் தங்கையின் கரம் பிடித்து
அன்பான வார்த்தைகளால் கவிதை உலகிற்க்கு
ஆற்றுப்படுத்தியதில்
என் பங்கும் எள்ளளவு உண்டு.
தென்கோடி தமிழகத்தின்
கடற்கரையோர நகர் ஒன்றில்
வசித்து வந்த
படைப்பாளி ஒருவருடன்
கடித தொடர்பு ஏற்பட்டது
அந்த தொடர்பு
நவீன இலக்கியத்தின்
பல கதவுகளை எனக்குள் திறந்தது
ஒரு தாயின்
அரவணைப்பை தந்த
அந்த மூத்த
படைப்பாளியின் நிழலில்
என் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.
அஞ்சல் வழி கல்வியால்
பாதியில் தடைபட்ட
என் கல்வியை தொடர்ந்தேன்.
ஊடகவியலை கற்று
தெளிந்தேன்.
நிழல் பரப்பிய இடத்தில்
அவர் பெற்ற வாரிசின் முன்னுரிமை
கோடை வெப்பமாய் தகிக்க தொடங்கியது.
தாய்மரத்தை விட்டு
தனி மரம் ஒன்றில்
இந்த பறவையின் வாசம்
புதிதாக நான் தொடங்கிய பத்திரிகை
புதிதாக நான் தொடங்கிய பதிப்பகம்
நான்
கைகோர்த்த இரண்டு புதிய உறவுகளோடு
தொடர்ந்தது வாழ்க்கை
இப்படியாக தொடர்கிற
என் இலக்கிய பயணத்தில்
இன்றைய நிலவரம்
மதவெறி எத்தர்களால் வலிந்து
திணிக்கப்பட்ட கலவரம்
கேரள வெள்ள பேரிடரின்
காரணம்
சபரி மலை ஐயப்பனின் கோபம்
பெண்கள் தன்னை தரிசிக்க
நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியதால்
விட்டுவிட்டார் ஐயப்பன் சாபம்
என்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க உளறலின்
எதிர்வினையாய் எழுந்தது
என் கவிதை
என் கவிதை ஆயுதம் தூக்கவில்லை
பாசத்தோடு பாடம் நடத்தியது
பெண்மையை தாய்மையாய் . . .
இயற்கையின் பேராற்றலாய் . . .
போற்றி புகழ்ந்தது
பெண்மை அசுத்தம் என்று
இகழந்தவர்களின் அநீதியை
குற்றவாளி கூண்டில் ஏற்றியது
அன்பான வார்த்தைகளால்
கவிதைகளை குவிக்கும்
எளிய கவிஞனான என்னை
தாக்க
இந்த உலகில் என்னென்ன
கொடூரமான வார்த்தைகள் உண்டோ
அனைத்தையும் கொட்டித்தீர்த்தனர்
கொடும்விஷம் கொண்ட தேளாக
வேறு சிலரோ கொன்றுவிடுவோம்
உன்னை என்று அலைபேசிமூலம்
அலற தொடங்கினர்.
மதவெறி பாம்புகள்
அவர்கள் வார்த்தைகளில்
படம் எடுத்துக்கொண்டிருந்தது
இந்து பெண்களின்
உரிமைக்கு குரல் கொடுக்க
யாரடா நீ?
நீ ஒரு முஸ்லீம் அல்லவா?
என்று என்னை பார்த்து
அற்ப கேள்விகளை
பதாகைகளாக தூக்கி பிடிப்போரே
மௌன சாட்சியாய் இருக்கும்
என் மனசாட்சியை பேச விடுகிறேன்
என் ஒருவனின் குரல் அல்ல இது
ஓராயிரம் கவிஞர்களின்
ஓராயிரம் மனிதர்களின்
ஒருமித்த குரல் இது
நான் முஸ்லீம் அல்ல
நான் கிறிஸ்துவனும் அல்ல
நான் இந்துவும் அல்ல
இந்த பூமிப்பந்தில் உள்ள
எந்த மதத்தையும் சாராதவன் நான்
இறை நம்பிக்கை இல்லாதவன் நான்
என்று சொல்வேன் என்று
நினைத்தீரோ?
இறை நம்பிக்கை இல்லாத நீ
கடவுளின் பெயரால் நடக்கும்
அநீதியை கேட்க உரிமையில்லை
என்று மடக்கி விடலாம்
என்று மனப்பால் குடித்தீரோ ?
பிறகு
யார்தான் நீ ?
மனுசிகளின் உரிமையை
பாடவந்த மனிதன் நான்.
உண்மையாய் மனம் வளர்த்த
எளிய கவிஞன் நான்
No comments:
Post a Comment