Translate

Wednesday, September 5, 2018

நீயும் நானும்


மதவெறியர்களால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ், கல்புர்கி

யாரங்கே?                            

அவனை நெடுநேரம்

காக்க வைக்காதீர்கள்

உடனடியாக அவனை

உள்ளே அனுப்புங்கள்

பேசி அனுப்பிவிடுகிறேன்

விரைவாக . . .

 

தபோல்கர் . . . 

பன்சாரே . . .

கவுரிலங்கேஷ். . .

கல்புர்கி . . .

என்று 

என்  மரணவேட்டை 

தொடர்வதாக

நீ

கூப்பாடு போடாதே

 

இந்த இந்திய திருநாட்டின்

மூலை முடுக்குகள் எங்கும்

இஸ்லாமியர்களும் தலித்துகளும்

கொல்லப்படுவதையும்

கொடூரமாக தாக்க படுவதையும்

கண்டு அந்த கனிந்த மனம்

படைத்தவர்கள் கலங்கிடலாமா ?

 

ஆதலால்

அவர்கள் மீது

என் கருணை பார்வை பட்டதை

நீ ஏன் ஏற்று கொள்ளாமல்

சண்டை செய்கிறாய் ?

 

நீ என்னை காண

உள்ளே வரும் போது

வாசலில் நீதியும் தர்மமும்

கூனிக்குறுகி நின்றதை

பார்த்தாய் அல்லவா?

 

நான்  இன்னும்

நிறைய செயல் திட்டம்

வைத்துளேன்

 

இதற்கே

நீ

தூக்கத்தில் இருந்து

தீடீரென்று  விழித்துக்கொண்ட

குழந்தை போல்

வீறிட்டு அழுகிறாயே?

 

பிழைக்க கற்றுக்கொள்

அதட்டுகிற

அதிகாரத்தின் குரலுக்கு

அடிபணிந்து

நடக்க கற்றுக்கொள்

 

அங்கேபார்

வாலாட்டுகிற நாய்களையும்

அவைகள்

கவ்விக்கொண்டு போகிற

எலும்புத்துண்டுகளையும்

 

இவைகளை போன்ற

இரண்டு கால் நாய்களை

எங்கேயும் நீ மிக

சுலபமாக காணலாம்.

 

கலை இலக்கிய மற்றும்

அரசியல் உலகத்தில். . .

ஏன் நீ இப்பொழுது

நடந்து வந்த நடுத்தெருவில் கூட

 

இல்லை இல்லை

நான் போராடித்தான் தீருவேன்

என்று வீம்பு செய்கிறாயா?

 

நீ போராடு

நான்  தடையேதும் செய்யவில்லை

 

மனசாட்சியை தூக்கி எறியும்

போராட்டத்தில் இருந்து

உன் புரட்சிகர வாழ்வை

தொடங்கு

 

அதில் நீ

தோற்றால் கலங்கிடாதே

மனச்சாட்சியை கூப்பிட்டு

கலவரையறையற்ற

வேலைநிறுத்தத்தை தொடங்கிடுக

என்று கட்டளையிடு

 

புரட்சிக்கு

புது முகவரி தீட்டும்

என் போன்ற

விற்பன்னர்களை வியந்தோது

 

அப்புறம்

உன் பெயர் கூட ஏதோ சொன்னாயே ?

ம்! நினைவுக்கு வந்துவிட்டது

 

அப்பாவி இந்திய குடிமகன்

 

என்ன சரிதானே  ?

 

உன்னை பார்த்தால்

எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

 

எங்கே கிளம்பிவிட்டாய்?

 

ஒரு நிமிடம் நில்

என் பெயரையும்  கேட்டுவிட்டு

பிறகு போ

 
என் பெயர்தான்  மதவெறி

No comments:

Post a Comment