Translate

Friday, May 11, 2018

கவிஞர்கள் செல்வியும் ,சிவரமணியும்





எழுபதுகளின் இறுதியில் , இலங்கையில் அரசின் அடக்குமுறை

ஈழ தமிழர்களுக்கு எதிராக உச்சத்தை அடைந்தபோது

போராளிகளின் எதிர் வினையும் அதே உக்கிரத்தோடு எழ தொடங்கியது .

இத்தகைய  போக்கு ஈழ தமிழர்களின் வாழ்வின் மீது கவிந்த பேரிருளை

உதைத்து விரட்டும் ஆற்றல் மிக்க தொரு ஒளி பாய்ச்சலாகவே

உணரப்பட்டது .

இந்த நிலை ஒரு புறம் இருப்பினும் , போராளி இயக்கங்கள் தங்களுக்குள் சகோதர சண்டையிட்டு கொண்டதும்,

தமிழீழத்தின் தலை சிறந்த கவிஞர்கள் , முற்போக்கு சிந்தனையாளர்கள்  மற்றும் அறிவுஜீவிகள்  

சிங்கள இனவெறியர்களால் மட்டுமல்லாது  போராளிகளாலே வேட்டையாட படுவதும் அடிக்கடி நிகழும் ஒரு வேதனை போக்காக தொடர்ந்தது.

இந்த அவலத்தையே ,கவிஞர் .திரு மு .மேத்தா

நான்கு புறமும் அலைகள்

நடப்பதெல்லாம் கொலைகள்

என்ற தன் கவிதை வரிகளின் மூலம் படம் பிடித்திருந்தார் .

அப்படி பாதிப்படைந்தவர்களில் ,

இருவர் தான்  செல்வியும் சிவரமணியும் .

தமிழ் ஈழம் தந்த இரு பெண் கவிஞர்களான செல்வி மற்றும் சிவரமணியை தமிழ் இலக்கிய உலகம் மறந்திருக்க முடியாது.

இவர்கள் இருவரும் விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்தை பரப்பி வந்தனர்.
இவர்கள் இருவரில் சிவரமணி,


என் கைகளுக்கு

எட்டிய தொலைவுவரை

என் அடையாளங்கள்

அனைத்தையும் அழித்துவிட்டேன் .

என்னுடைய இந்த

முடிவிற்காக என்னை

மன்னித்து விடுங்கள்.
 என்று தன்னுடைய இறுதி கவிதையை எழுதிவைத்து விட்டு

தன்னால் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளின் கையெழுத்து பிரதிகளையும்
தீயிற்கு இரையாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
சிவரமணியின் தற்கொலைக்கு போராளி இயக்கங்களின் கொலை மிரட்டலே காரணம் என பரவலாக சொல்லப்படுகிறது.


சிவரமணி "எமது விடுதலை " என்ற தன் கவிதையில்



விடுதலை என்றீர்

சுதந்திரம் என்றீர்

எம் இனம் என்றீர்

எம் மண் என்றீர்

 

தேசங்கள் பலதிலும்

விடுதலை வந்தது இன்று

சுதந்திரம் கிடைத்தது

எனினும்

தேசங்கள் பலதிலும் மனிதர்கள்

இன்னும்

பிச்சைப் பாத்திரங்களை

வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

நாமும் பெறுவோமா

தோழர்களே

பிச்சைப் பாத்திரத்தோடு

நாளை ஒரு விடுதலை?

 

நாம் எல்லாம் இழந்தோம்

எனினும்

வேண்டவே வேண்டாம்

எங்களில் சிலரது விடுதலை

மட்டும்;

விலங்கொடு கூடிய


விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
 
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.


 
                      என்று எழுதியிருப்பார் .





இப்படிப்பட்ட பக்க சார்பற்ற ,மானுடத்தை நேசித்த அந்த மகத்தான கவிஞர் வாழ முடியாமல் சாவின் கரங்களில் வீழ்ந்தார் .

செல்வியோ காணாமல் அடிக்க பட்டார்.
கவிஞர் செல்வி திடீரென்று காணாமல் போனதற்கு புலிகள் இயக்கமே காரணம் என்று தமிழ் ஈழ மண்ணிலும் அதற்கு வெளியில் உலகம் தழுவிய

அளவிலும் தமிழர்கள் மத்தியில் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.
செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது.

காலங்கள் உருண்டோடி விட்டாலும்
என் மனதை குடையும் கேள்வி இதுதான்:
கவிஞர்கள்  செல்வி மற்றும் சிவரமணியின் இலட்சியமும்
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இலட்சியமும் ஒன்றே .பின்பு ஏன் இந்த இந்த உட்பகை?

 

புவிசார் அரசியல் (GEO POLITICS)


புவிசார் அரசியலின் தாக்கம் எந்த வகையிலும் மலர போகும்  தமிழ் ஈழத்தை பாதித்து விட கூடாது என்றே கடைசிவரையில் தலைவர் பிரபாகரன் போராடினார் .
அமெரிக்க வல்லாதிக்கமோ ,சீன வல்லாதிக்கமோ தமிழ் ஈழ மண்ணில் கால் பதித்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் .
ஒரு வேளை அமெரிக்காவிற்கோ , சீனாவிற்கோ  அனுசரணையாக பிரபாகரன் இருந்திருந்தால்
தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் .
ஆனால்  அதன்  தனி தன்மை குலைந்திருக்கும் .
தான் இருக்கும் வரை அதை அனுமதிக்க கூடாது என்றே பிரபாகரன் போராடினார் .

 

சிவரமணி தன் கவிதையில் , (விலங்கொடு கூடிய விடுதலை)

 

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
 
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.

 

கூறியிருப்பதும் இதையே .

பின்பு ஏன் இரு தரப்பிற்கும் சரியான புரிதல் இல்லை ?

 
மரணமெனும் சூனிய வெளியில் கவிஞர்கள் செல்வியும் ,சிவரமணியும்
கலந்து விட்ட இந்த வேளையில் ,
தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்னும் மர்ம முடுச்சுகள்
நம்மையெல்லாம் பிணைத்திருக்கும் இந்த சூழலில்,

 தொலைதூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கத்தை வெறித்து கொண்டிருக்கும்
என் மனதில் எழுந்த கேள்விகள் ...
இவை எனக்கானது மட்டுமல்ல .உலகெங்கிலும் பரவிவாழும் ஈழ தமிழருக்கானது .


 
இந்த கேள்விக்கான பதிலை ஈழ தமிழர்கள் அடைந்தால் , அவர்களுக்குள் மனதால் கொண்ட வேற்றுமைகள்

தகர்ந்தால்  அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி.









1 comment:

  1. Do you have a more detils,pic and poems of selvi, shivaramani? and specially selvi"s drama ? Plz sent to me epapiras@gmail.com

    ReplyDelete