நாங்கள்
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத
கர்நாடகாவை எதிர்த்து
போராடிக்கொண்டிருந்தோம்.
அவர்கள்
காவேரியில் இருந்த
மணலையெல்லாம் அள்ளி
கடத்திக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள்
மணல் கொள்ளையை கண்டித்து
மறியல் நடத்த முற்பட்டபோது,
அவர்கள்
மலைகளையும் குடைந்து
பண புதையலை அள்ள
பக்காவான திட்டம்
தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள்
எங்களின் முதலமைச்சரின்
மர்ம மரணத்திற்கு மனம் கலங்கி
நீதி மன்றங்களின் கதவுகளை
தட்டிக்கொண்டிருந்தோம்.
அவர்கள்
தங்களின் தலைவி
மர்மமாய் மறைந்த கண்ணீர் ஆறும் முன்னே
பதவிச்சண்டை இட்டுக்கொண்டு
தங்களுக்குள்
உதைகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
ஒட்டுமொத்த காவிரி டெல்ட்டாவும்
பட்டுபோய் பாலைவனமாகும் சோகத்தில்
எங்கள் விவசாயிகள் தலைநகர் டெல்லியில்
ஒப்பாரி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது
இங்கே அவர்கள்
கூவத்தூர் சொகுசு விடுதிகளிலே
ஆனந்த நடனமாடி அகமகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
நாங்கள்
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்திய பின்பு
எத்தனையோ நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில்
ஏறி ஏறி
எங்கள் கால் செருப்புகள் தேய்ந்தபின்பு
எங்களில் பலர் இருமி இருமி செத்த பின்பு
புற்று நோயால் தீப்பற்றி பலர் தேகம் தீய்ந்த
பின்பு
ஊற்றெடுக்கும் கண்ணீரை துடைத்தபடி
எங்கள் முத்து நகரை காப்பாற்றும் முயற்சியாக
பேரணியாய் ஆட்சியர் மாளிகை நோக்கி நடக்கும்
வேளையில்
அவர்கள்
அனுப்பிய காவல் வீரர்கள்
நிராயுதபாணிகளான எங்களை தீர்த்து கட்ட
துப்பாக்கிகளை தூக்கி பிடித்தார்கள்.
முத்து நகர் மண்ணில்
எங்களின் வாழ்க்கை போராட்டம்
இரத்த கோலம் போட்டது.
நாங்கள்
அவர்களை
அரசியல்வாதிகள் என்றே
இன்றுவரை
அன்போடு அழைக்கிறோம் .
அவர்கள்தான் எங்களை
சமூக விரோதிகள் என்று சொல்லி
சங்கடப்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment