Translate

Monday, May 28, 2018

வர்ணாசிரமத்தின் தாலி





மகாகவி பாரதியை பற்றி  பாராட்டி பல்வேறுபட்ட கவிஞர்கள் எழுதிய பாராட்டு கவிதைகளின் தொகுப்பு "பாரதீயம்" என்றோரு கவிதை நூல்.
அந்த நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதையை பற்றி சில எண்ணங்களை பகிரும் முயற்சி இந்த சிறு கட்டுரை .
பாரதி
நீ ஒரு
தாழ்த்தப்பட்டவனுக்கு
பூணூல் அணியச்செய்தாய்
வர்ணாசிரமத்தின் தாலி
அறுக்கப்பட்டது
என்று பாரதிக்கு கவிமாலை சூட்டுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.


இது எப்படி என்பது நமக்கு புரியவில்லை.
ஆசிரமம் என்றால் படி நிலை என்று பொருள்.
மிக உயர்ந்த சாதிகள் என்றும்
அதற்கடுத்த உயர் நிலை சாதிகள் என்றும்
பிறகு இடைநிலை சாதிகள் என்றும்
கடைசியில் கடைநிலை சாதிகள் என்றும்
மக்களை பிரித்து ஏற்ற தாழ்வுகளை கற்பித்து
 சிலர் வாழ ,சிலர் ஆதிக்க வெறியுடன் ஆள
பலர் மீளா துயரில் மாள அவமான படுகுழியில் சாக

ஏற்படுத்த பட்ட அட்டூழிய சமூக அமைப்பே சாதீய கட்டுமான அமைப்பு.
இதன் பேய் கரங்கள் கடைக்கோடி கிராமங்களில் இரட்டை குவளை முறை, ஆலய நுழைவு மறுப்பு என்று நீள்கிறது என்றால், பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் மர்ம மரணங்கள் வரை தொடர்கிறது.
"சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் பூணூல் அணிவித்து, காயத்திரி மந்திரத்தை சொல்லி தந்து விட்டால் போதும் சமூக ஏற்ற தாழ்வு நீங்கிவிடும்" என்ற பாரதியின் கூற்று நகைப்புக்கு இடமானது மட்டுமல்ல, நடைமுறைக்கு உதவாதது.
அது சரி. இன்னும் இங்கே நம் ஆதிக்க சாதி காயத்ரி ரகுராம்கள் "சேரி பிஹேவியர் " என்று வார்த்தை வன்முறை தொடுத்து  கொண்டிருக்கிறார்களே! பாரதி இன்று மீண்டும் இங்கே வந்தால் , தலித் சகோதரர்களுக்கு பூணூல் போடும் வேலையை பார்த்து கொண்டிருக்கமாட்டார். சமூகத்தின் அணைத்து வகுப்பினருக்கும் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரம் சொல்லி தருவேன் என்ற பாரதி பிக் பாஸ் காயத்ரிகளுக்கு சமூக நீதி பாடம் எடுத்துக்கொண்டிருப்பார்.


சமூகத்தில் உள்ள பிற வகுப்பினர் பூணூல் அணிவதுதான் புனிதம் என்று நினைத்தால், சாதீய ஏற்ற தாழ்வுகளையும் அதன் கற்பிதங்களையும் சேர்த்தே ஏற்கிறார்கள் என்றே பொருள்.


எல்லா வேலைகளும் சமம். யார் வேண்டுமானாலும் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே தலைமுறை தலைமுறையாக செருப்பு தைக்க வேண்டும் என்று சொல்வதும் அவர்களை கோவிலுக்குள் விடாமல் தடுப்பதும் எந்த வகை நியாயம்.
இதற்கு தீர்வென்ன?



ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே தலைமுறை தலைமுறையாக மலம் அள்ள வேண்டும் என்று சொல்வதும் அவர்களை கோவிலுக்குள் விடாமல் தடுப்பதும் எந்த வகை நியாயம்.


இதற்கு தீர்வென்ன?

இவர்களுக்கெல்லாம் பாரதி மட்டும் பூணூல் அணிவிப்பது இவர்களின் வாழ்க்கையில் என்ன மறுமலர்ச்சியை  கொண்டு வரும்?
அதுவும் கூட பாருங்கள் பாரதி மட்டும் தான் செய்தார்.
இன்றளவும் பிற சமூகத்தினர் கடவுளை வழிபாடு செய்யும் உரிமையை அரசு தந்த பின்பும் ஆதிக்க சாதிகள் தர மறுக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு பூணூல் அணிய செய்ய முடிந்த பாரதியால்
ஒரு உயர்சாதி மனிதனை கொண்டு செருப்பு தைக்கவோ, மலம் அள்ளவோ
ஏற்பாடு செய்ய முடிந்ததா ?
இங்கே இதுதான் சிக்கல்.
ஓன்று உயர் சாதி மக்கள் அனைத்து வேலைகளும் சமம் என்ற புரிதலுக்கு வரவேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தான் செய்யும் வேலை எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல என்ற எண்ணமும்,
அதே வேலையில் தான் விரும்பினால் மற்ற வேலைகளுக்கு தானோ தன் தலைமுறையோ மாறிக்கொள்ளும் உரிமை உண்டு என்கிற எண்ணம் பெறவேண்டும்.
ஆலய நுழைவு , ஆண்டவன் வழிப்பாடு , கோவில் திருவிழாக்கள், கலை இலக்கிய அரசியல் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளில் மற்ற பிரிவினர் போல் கலந்துகொள்ளும் உரிமை அடைவதே சமூக நீதி.
இந்த சமூக நீதிக்காகவே இங்கே தந்தை பெரியாரும் , வடக்கே அண்ணல் அம்பேத்காரும் இறுதிவரை முழு மூச்சுடன் போராடினர்.

தமிழர்களுக்கு என்று ஒரு ஆன்மிக பாரம்பரியம் உண்டு
அவர்கள் நெடுங்கால வழக்கப்படி எல்லை தெய்வங்களையோ (அய்யனார் , சுடலமாடன்சாமி , கருப்பன் சாமி)
அல்லது பெண் தெய்வங்களையோ (மாரியம்மன், காளியம்மன் ) போன்ற தெய்வங்களையோ அல்லது வள்ளலார் காட்டிய பெருநெறியிலோ செல்வது சரியா?

பிராமிணர்கள் பத்தினிக்கு பிறந்தவர் மற்றவர்கள் (விரிவான விவரங்களுக்கு பார்க்க என் கட்டுரை  : " பிராமினாள் ஹோட்டல்"- இதே வலை பூவில் ) வேறு மாதிரியான இழி பிறப்பின் மூலம் வந்தவர்கள்  என்று சமூகத்தை நான்கு படிகளாக்கி துண்டாடிய அட்டூழிய வழியில் பூணூல் அணிந்து செல்வது சரியா ?



எனவே,
பாரதி

நீ ஒரு

தாழ்த்தப்பட்டவனுக்கு

பூணூல் அணியச்செய்தாய்

வர்ணாசிரமத்திற்கு

அறுபதாம் கல்யாணம் நடந்தது.
என்று வேண்டுமானால் சமூக நீதி உணர்வு கொண்ட நாம் இந்த கவிதையை மாற்றி எழுதி பார்க்கலாம்.
இதோ ஏதோ , பாரதியையும், கவிக்கோ. அப்துல் ரகுமானையும் குறைகாணும் குனிந்த நோக்கம் கொண்டதல்ல.
அவ்விரண்டு மானுடம்பாடிகளை விடவும், மானுடம் பெரிது.




இன்று வடக்கே வரிசையாக பல்கலைக்கழகங்களில் நடக்கும் தலித் மாணவர்களின் மர்ம மரணங்களையும், தமிழ் மண்ணிலே இரத்த கோலமிடும் சாதீய ஆணவ படுகொலைகளையும்


அந்த மாபெரும் கவிஞர்கள் காண நேர்ந்தால் ,
இந்த எளியவனின் விமரிசனத்தை மனப்பூர்வமாக ஏற்பார்கள் என்ற திட நம்பிக்கைகள் எனக்குண்டு.


























No comments:

Post a Comment